சென்னை வேளச்சேரியில் ஏடிஎம் மையத்தில் நிரப்புவதற்கு எடுத்துச் சென்ற ரூ.25 லட்ச ரூபாயை திருடிய வாகன ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 8 லட்ச ரூபாயை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வேளச்சேரி பகுதியில் ஹைடெக் கேஷ் மேனேஜ்மென்ட் என்ற பெயரில் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம், வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் பணியை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் இருந்து வழக்கம் போல், நிறுவனத்தின் ஊழியர்கள் பாதுகாப்பு காவலர்களுடன், வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்புவதற்காக பணப்பெட்டிகளை வாகனத்தில் எடுத்துச் சென்றனர். ஓட்டுநர் விக்னேஷ் குமார்(27) வாகனத்தை ஓட்டிச் சென்றார். வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணத்தை நிரப்பி விட்டு, ஊழியர்கள் மீண்டும் நிறுவனத்திற்கு திரும்பினர்.இறுதியில் கொண்டு சென்ற பணத்தை சரிபார்த்தபோது, பணம் குறைவாக இருப்பது கண்டு நிறுவனத்தின் மேலாளர் அதிர்ச்சி அடைந்தார்.
சந்தேகம் அடைந்த மேலாளர், வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், வாகனத்தின் ஓட்டுநர் விக்னேஷ் குமார், பணப்பெட்டியில் இருந்து பணத்தைத் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து நிறுவனத்தின் மேலாளர் அரவிந்தன், வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஓட்டுநர் விக்னேஷ் குமாரைக் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 லட்ச ரூபாயை பறிமுதல் செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More Stories
வீட்டில் பீரோவை உடைக்காமலேயே 21 சவரன் தங்கம்.. 2 ஏக்கர் நிலப்பத்திரம் திருட்டு …
அரசு பஸ் பழுதால் அடர்ந்த வனப்பகுதியில் இறக்கி விடப்பட்ட பயணிகள்: 3 கி.மீ. தூரம் பீதியுடன் நடந்துசென்ற அவலம்…
பெண் விவகாரத்தால் கார் டிரைவர் கொலை?