செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த குழந்தை உட்பட 46 பேர் மீட்பு:

பொன்னேரி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த குழந்தைகள் உட்பட 46 வடமாநில தொழிலாளர்கள் மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பொன்னேரி அடுத்த வன்னிப்பாக்கம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது. இங்கு, வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இவர்கள், குறைந்த ஊதியத்தில் கொத்தடிமைகளாக பணியாற்றி வருவதாக பொன்னேரி ஆர்டிஓ ரவிச்சந்திரனுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து அவரது தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று செங்கல் சூளையில் சோதனை நடத்தினர். அப்போது, செங்கல் சூளை உரிமையாளரிடம் முன்பணம் பெற்றுக்கொண்டு குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து ஒடிசாவை சேர்ந்த 22 குடும்பங்களை சேர்ந்த 7 குழந்தைகள் உட்பட 46 பேரை வருவாய் துறை அதிகாரிகள் மீட்டு அரசு பள்ளியில் தங்கவைத்தனர். இதையடுத்து விடுதலை சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், அவர்களின் மறுவாழ்விற்காக 30,000 ரூபாய் உதவித்தொகை வங்கி கணக்கில் செலுத்த தொழிலாளர் நலத்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டது. மீட்கப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் 46 பேரும் ரயில் மூலம் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் வன்னிப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.