May 7, 2026

தவெகவுடன் கைகோத்த காங்கிரஸ்: தமிழகத்தில் மாறப்போகும் அரசியல் கணக்கு!

தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கான மேஜிக் எண் 118-ஐ எட்டுவதற்காக, தவெகவுடன் காங்கிரஸ் கட்சி கைகோத்துள்ளது. இந்த புதிய கூட்டணியால் தமிழக அரசியலில் ஏற்படப்போகும் மாற்றங்கள் என்னென்ன என்ற கேள்வி இப்போது எழுகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், ஆளும் கட்சியாக இருந்த திமுகவுக்கும், எதிர்க்கட்சியாக இருந்த அதிமுகவுக்கும் ஷாக் கொடுத்து தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பெரும்பான்மைக்கு மேலும் 11 இடங்கள் தேவை என்ற நிலையில், தவெகவை ஆதரிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது

தவெகவை ஆதரிப்பது குறித்து காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘எந்தவொரு வகுப்புவாத சக்தியையும் இந்தக் கூட்டணியில் சேர்க்காமல் தவெக விலக்கி வைப்பதை அடிப்படையாகக் கொண்டே எங்களது ஆதரவு வழங்கப்படும். இந்தக் கூட்டணி, தற்போதைய அரசாங்கத்தை அமைப்பதற்கு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகள், மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தல்களுக்கும் பொருந்தும்’ எனத் தெளிவாகத் தெரிவித்துள்ளது

இதன்மூலமாக, பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் சேர்க்க கூடாது என்று நிபந்தனையை காங்கிரஸ் மறைமுகமாக விதித்துள்ளது. மேலும், வரப்போகும் அனைத்து தேர்தல்களிலும் தவெகவுடன்தான் கூட்டணி என்பதையும் காங்கிரஸ் உறுதிப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக திமுக கூட்டணியில் இருந்த பெரிய கட்சியான காங்கிரஸ், அந்தக் கூட்டணியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியுள்ளது.

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்த நிலையில், தேமுதிக மற்றும் ஐயுஎம்எல் கட்சிகள் விஜய்க்கு ஆதரவளிக்கப் போவதில்லை என தற்போதைய சூழலில் அறிவித்துள்ளன. ஆனாலும், தலா 2 எம்.பிக்களை வைத்துள்ள விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் விஜய்யை ஆதரிக்க மாட்டோம் என இப்போதுவரை வெளிப்படையாக சொல்லவில்லை.

அதேவேளையில், “காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவற்றின் ஆதரவை விஜய் தலைமையிலான தவெக கேட்டுள்ளது. விசிக தலைவர் திருமாவளவனுக்கும் ஆதரவு கேட்டு கடிதம் வந்துள்ளது. இதுவரை தவெக மதசார்பற்ற கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உறுதியாக இருக்கிறது. அதனால்தான் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவை கோரியுள்ளனர்’ என்று விசிக பொதுச் செயலரும் எம்.பி.யுமான ரவிக்குமார் கூறியிருப்பதும் ‘பாசிட்டிவ்’ சிக்னலாக பார்க்கப்படுகிறது.

எனவே விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய மூன்று கட்சிகளும் தவெகவுக்கு ஆதரவளிக்க வாய்ப்புள்ளதாகவே சொல்லப்படுகிறது

வழக்கமாக எல்லா விஷயத்திலும் ஆமை வேகத்தில் முடிவெடுக்கும் காங்கிரஸ் இப்போது தவெக ஆதரவு முடிவை சில மணி நேரங்களில் எடுக்க காரணம் அதிமுகதான். ஏனெனில் தவெக தரப்பில் ஒருபக்கம் அதிமுகவுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஒருவேளை முதல் ஆளாக தவெக கூட்டணியில் அதிமுக இணைந்தால், தங்களுக்கான முக்கியத்துவம் இருக்காது என்பதை உணர்ந்தே காங்கிரஸ் மிக வேகமாக இந்த ஆதரவு முடிவை அறிவித்து விஜய்க்கு துண்டு போட்டுள்ளனர்.

தவெகவுக்கு ஆதரவளிப்பதற்கு பின்னால், காங்கிரஸுக்கு மூன்று முக்கிய காரணங்கள் உண்டு. 1967-க்கு பின்னர் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அமைச்சர் பதவிகளை வகித்தது இல்லை. எனவே, இப்போது தவெக அரசில் அங்கம் வகித்து கட்சிக்கு புது ரத்தத்தை பாய்ச்சலாம் என்பது முதல் கணக்கு.

திமுக கூட்டணியில் இருந்தவரை, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தங்களை மேடையில் வைத்துக்கொண்டே எள்ளி நகையாடினார்கள் என்ற வருத்தம் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உண்டு. புதியவர்களான தவெகவினர் தங்களுக்கு உரிய மரியாதையை கொடுப்பார்கள் என்றும் காங்கிரஸ் நம்புகிறது. மேலும், வரப்போகும் உள்ளாட்சி தேர்தலிலும் தவெக கூட்டணியில் உரிய இடங்களை பெற்று, வெற்றியடைந்து கட்சியை வளர்க்கலாம் என்ற இரண்டாவது கணக்கும் உண்டு.