May 6, 2026

தவெக வேட்பாளருடன் பேசியதால் அதிமுக நிர்வாகி வீட்டில் கல்வீச்சு: கார் கண்ணாடி நொறுங்கியது;

சிவகாசி தொகுதி வாக்கு எண்ணிக்கையின்போது, தவெக பெண் வேட்பாளருடன் பேசிய அதிமுக நிர்வாகி வீட்டில் சரமாரி கல்வீசப்பட்டது. இதில் கார் கண்ணாடி நொறுங்கியது. இது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில் தவெக வேட்பாளர் கீர்த்தனா 68,709 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கணேசன் அசோகன் 57,039 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி 51,078 வாக்குகளும் பெற்றனர்.

தேர்தல் பிரசாரம் தொடங்கியதில் இருந்து அதிமுகவினர் சிலர் தவெக வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டதாக அக்கட்சிக்குள் புகைச்சல் இருந்து வந்தது. இந்நிலையில், அதிமுக வேட்பாளர் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது அக்கட்சியினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, நேற்று வாக்கு எண்ணிக்கையின்போது தவெக வேட்பாளர் கீர்த்தனாவுடன், திருத்தங்கல்லை சேர்ந்த அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச்செயலாளர் வி.எஸ்.பலராம் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதனால் அங்கு நின்றுகொண்டிருந்த அதிமுக முகவர்கள் சிலர் கடுப்பானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிந்து, திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனியில் உள்ள தனது வீட்டிற்கு பலராம் திரும்பினார். இரவில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். நள்ளிரவு 12 மணியளவில் இரண்டு பைக்குகளில் அங்கு வந்த மர்மநபர்கள், பலராம் வீட்டின் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி நொறுங்கியது. பின்னர், மர்மநபர்கள் இருவரும் தப்பிச் சென்றுவிட்டனர். இது குறித்து பலராம் திருத்தங்கல் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதிமுக நிர்வாகி வீட்டில் நள்ளிரவில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தவெக பெண் வேட்பாளருடன் பலராமன் பேசிய கடுப்பில் அவரது கட்சியினரே இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதில் தொடர்புடைய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.