April 15, 2026

ஷாக்…காவல் நிலையத்தில் வெடிகுண்டு வெடித்து 9 பேர் பலி

ஜம்மு காஷ்மீரில் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வெடித்து போலீஸார் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் நவ்காம் காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையத்தில் ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களின் மாதிரிகளை நேற்று இரவு பிரித்து ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அப்போது அது திடீரென பயங்கர சத்தத்துடன் அது வெடித்தது. இதில் தடவியல் நிபுணர் குழு, போலீஸார் என 9 பேர் உயிரிழந்தனர். மேலும் காவல் நிலையத்தில் இருந்த 20 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 5 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த வெடிகுண்டு வெடிப்பில் காவல் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களும் சேதமடைந்தன.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,” சமீபத்தில் ஹரியாணாவின் ஃபரிதாபாத்தின் புறநகர் பகுதியான ஃபதேபூர், தாகா கிராமங்களில் வாடகைக்கு எடுக்கப்பட்ட இரண்டு அறைகளில் இருந்து வெடிகுண்டு தயாரிக்கும் 2,900 கிலோ கிராம் அம்மோனியம் நைட்ரேட் கைப்பற்றப்பட்டது. அல்ஃபலாஹ் மருத்துவக் கல்லூரியை சேர்ந்த ஜம்மு காஷ்மீர் புல்வாமாவை சேர்ந்த டாக்டர் முஸம்மில் ஷகீல் என்பவர் தான் இந்த இரண்டு அறைகளையும் வாடகைக்கு எடுத்திருந்தார். இவர் இரண்டு வாரங்களுக்கு முன்பு காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒட்டிய தீவிராதத்தை ஆதரிக்கும் சுவரொட்டிகளால் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து அவரிடம் ஜம்மு காஷ்மீர் காவல்துறை விசாரணை நடத்தியது. இதையடுத்து ஹரியாணாவின் ஃபரிதாபத்தில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. அந்த வெடிபொருட்களை நவ்காம் காவல்நிலையத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் எஃப்எஸ்எல் குழுவினர் சோதனை நடத்திக் கொண்டிருந்த போது வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது” என்றனர்.

டெல்லி செங்கோட்டை அருகே நவம்பர் 10-ம் தேதி வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் வெடித்து 13 பேர் உயிரிழந்தனர். இந்த காரை ஓட்டி வந்த டாக்டர் உமர் நபி இந்த விபத்தில் உயிரிழந்தார். அவருடன் முஸம்மில் ஷகீல் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.