September 10, 2026

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளும் அதிமுகவுக்கு தான் : சபதம் எடுத்துள்ள முக.அழகிரி ஆதரவாளர் மன்னன்

முன்னாள் மத்திய இணையமைச்சர் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரும், மதுரையின் முன்னாள் துணை மேயராகவும் இருந்த மன்னன், அதிமுகவில் இணைந்தார்.

அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரின் முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார். இதனைத்தொடர்ந்து மன்னன் தனது காரில் அதிமுக கொடியை பொருத்திக் கொண்டார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மன்னன், “திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளோம். முழு மனதோடு அதிமுகவில் இணைந்து மக்கள் பணி செய்ய அனுமதி அளித்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, துணை பொதுச்செயலாளர் முனுசாமி, மாவட்ட கழக செயலாளர் செல்லூர் ராஜு ஆகியோருக்கு நன்றி என்று குறிப்பிட்டு பேசினார்.

மதுரையில் தற்போது 5 தொகுதிகள் அதிமுக, 5 தொகுதிகள் திமுகவுக்கு உள்ளது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். அதற்கு முழு ஒத்துழைப்போடு உயிரை கொடுத்து உழைப்போம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று மன்னன் கூறியுள்ளார்.

மேலும், “மதுரையில் நடக்கும் அதிகார துஷ்பிரயோகம் காரணமாக கீழ்மட்ட தொண்டர்களை அடிமை போல் நடத்துவதை முடிவுகட்ட வேண்டும் என்று அதிமுகவில் இணைந்துள்ளேன்” என்று கூறிய மன்னன், அதிமுகவில் இணைந்துள்ளதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.

You may have missed