
மதுரை:
மதுரை மாநகராட்சியில் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கச் செல்லும் அரசு அதிகாரிகளையே, ஆக்கிரமிப்பாளர்கள் நடுரோட்டில் வைத்து மிரட்டி வாக்குவாதம் செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மதுரை மாநகராட்சி 37-வது வார்டுக்கு உட்பட்ட தாசில்தார் நகர், அன்னை அபிராமி தெருவில் பொதுச் சாலையை ஆக்கிரமித்துக் கொட்டப்பட்டுள்ள கட்டுமானப் பொருட்கள் இதுவரை அகற்றப்படாததால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
’ஜியோ நியூஸ் தமிழ்’ செய்தி எதிரொலி:
இப்பகுதியில் புதிய வீட்டுக் கட்டுமானப் பணிக்காக மணல், ஜல்லி மற்றும் செங்கல் போன்ற பொருட்கள் பொதுப் பாதையையும், அண்டை வீடுகளின் முன்பகுதியையும் மறித்துச் சட்டவிரோதமாகக் குவிக்கப்பட்டிருந்தன. இது குறித்து கடந்த ஜூன் 21, 2026 அன்று மாநகராட்சி வாட்ஸ்அப் புகார் எண்ணில் G-20260621-0041448 என்ற எண்ணில் புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இப்பொதுமக்கள் பிரச்சினையை ஆதாரங்களுடன் ‘ஜியோ நியூஸ் தமிழ் இணையதளத்தில் அதிரடிச் செய்தியாக வெளியிட்டோம். செய்தி வெளியானதன் எதிரொலியாக, மதுரை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாகக் களத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். விதிகளையும், பொதுமக்களையும் மதிக்காமல் சாலையை ஆக்கிரமித்த குற்றத்திற்காக ஆக்கிரமிப்பாளர்களுக்கு ₹10,000 அதிரடி அபராதம் விதிக்கப்பட்டது.

பெண் அதிகாரிகளுக்கு நடுரோட்டில் மிரட்டல்?
மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொண்ட போது, கட்டிடத்தின் உரிமையாளரும் அவருடன் வந்த நபர்களும் அதிகாரிகளிடம், “நீங்க எப்படி நேராக வந்தீங்க? புகார் யார் கொடுத்தா? SO (சம்பந்தப்பட்ட உயர் அதிகாரி) போகச் சொன்னாங்களா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிப் பரபரப்பை ஏற்படுத்தினர்.
அதுமட்டுமின்றி, வந்திருந்த அதிகாரிகளிடம் SO-வின் தொலைபேசி எண்ணை வாங்கிப் பேசிய அந்த நபர்கள், அதிகாரிகளிடம் “SO போகச் சொல்லாமல் நீங்க எப்படி வந்தீங்க?” என்று கோபமாகக் கூறி நடுரோட்டில் வைத்து வாக்குவாதம் செய்தனர். மேலும், “நான் செஸ்படின் இருக்கும் போது எவ்வளவு செய்திருப்பேன்! மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நான் சொன்னா கேட்பாங்கன்னு தெரியும்மா உங்களுக்கு நீங்க அபராதம் போடுங்க, பொருளைக் கூட தூக்கிட்டுப் போங்க… நான் யாருன்னு அப்புறம் தெரியும்!” என்று கூறி, அங்கு வந்திருந்த பெண் அதிகாரிகளிடம் தன் வீரத்தைக் காட்டி மிரட்டும் தோனியில் பேசியுள்ளனர்.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், “அரசு அதிகாரிகளையே நடுரோட்டில் வைத்து மிரட்டுகிறார்களே… இவர்கள் அவ்வளவு பெரிய நபர்களா? அப்படியென்றால் இவர்களை யார் தான் கேட்பது? பொதுச் சாலையை மறித்துக் கட்டுமானப் பொருட்களைப் போட்டுவிட்டு, மாநகராட்சியில் புகார் கொடுத்தால் அதிகாரிகளையே மிரட்டுகிறார்களே!” என்று பரவலாகப் பேசத் தொடங்கினர்.

”அபராதம் கட்டியாச்சு.. நாங்க வேலையை முடித்துவிட்டுத் தான் எடுப்போம்!”
அதிகாரிகள் சம்பவ இடத்தை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு ₹10,000 அபராதம் விதித்தனர். தொடர்ந்து, ரோட்டில் உள்ள கட்டுமானப் பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தச் சொன்னதற்கு, “நீங்க தான் அபராதம் போட்டுட்டீங்களே… நாங்க வேலையை முடித்துவிட்டுத் தான் பொருட்களை எடுப்போம்” என்று ஆக்கிரமிப்பாளர்கள் அடாதடியாகப் பதில் சொன்னார்கள். அதிகாரிகள் சென்ற பிறகு, மீண்டும் கட்டுமானப் பொருட்களைப் பொதுச் சாலையில் போட்டுத் திமிரோடு வேலையைத் தொடர்ந்துள்ளனர்.
மாநகராட்சி ஆணையர் கௌரவ் குமார்கூறுகையில் :
இது சம்மந்தமாக ‘ஜியோ நியூஸ் தமிழ்’ சார்பாக மதுரை மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார் அவர்களைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அதற்குப் பதிலளித்த ஆணையர்:
”குறிப்பிட்ட கட்டிடத்தின் உரிமையாளருக்கு விதிகளின்படி ₹10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவிப்பதோ, சாலையைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பதோ சட்டப்படி குற்றமாகும். மீண்டும் இதே செயலில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் பாயும்!” என்று அதிரடியாகக் கூறினார்.
ஒரு அரசு நிர்வாகம் விதிக்கும் அபராதம் என்பது தவறைத் தடுப்பதற்கே தவிர, “அபராதம் கட்டிவிட்டோம் என்பதால் சாலையைத் தொடர்ந்து ஆக்கிரமித்துக் கொள்ளலாம்” என்ற உரிமை அல்ல என்பதை ஆக்கிரமிப்பாளர்கள் உணர வேண்டும்.
மாநகராட்சி பெண் அதிகாரிகளுக்கே சவால் விடும் வகையில் செயல்படும் இந்த ஆக்கிரமிப்பாளர்கள் மீது வெறும் அபராதம் விதிப்பதோடு நின்றுவிடாமல், பொதுச் சாலையை மறித்துக் குவிக்கப்பட்டுள்ள மணல் மற்றும் ஜல்லிக் குவியல்களை உடனடியாகப் பறிமுதல் செய்ய வேண்டும். மேலும், பொதுமக்களுக்குத் தொந்தரவு தரும் இந்தக் கட்டுமானப் பணிகளை முழுமையாக நிறுத்த மதுரை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் உடனடியாகத் தனி கவனம் செலுத்தி அதிரடி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பொதுமக்களின் அவசரக் கோரிக்கையாக உள்ளது.
அதிகாரிகளுக்கு சவால் விடும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது அடுத்தகட்ட கடுமையான அதிரடி பாயுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

More Stories
வைகை ஆறு விவகாரம்; “ ஆர்.என். ரவியிடம் கேளுங்கள்” – சு. வெங்கடேசன் எம்.பி!
மனமகிழ் மன்றங்களில் ‘ரீல்ஸ்’, வீடியோ எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை…
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: மீட்புப் பணியில் தொய்வு…