“திமுக என்னங்க.. திமுக, நான் எந்தக் கட்சியிலும் சேரவில்லை. அரசியலில் இருந்து விலகுகிறேன்” என்று அதிமுக முன்னாள் நிர்வாகியான குன்னம் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யார் இந்த குன்னம் ராமச்சந்திரன்?

முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கத்தின் தீவிர விசுவாசி. அ.தி.மு.க. சார்பில் குன்னம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2016ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் குன்னம் தொகுதியில் போட்டியிட்டார், ஆனால் அப்போது திமுக வேட்பாளராக இருந்த அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரிடம் தோல்வியடைந்தார். அதிமுகவில் பெரம்பலூர் மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார்.

வீடியோ வெளியிட்டு விளக்கம்

இது குறித்து    அவரே வீடியோ மூலம் விளக்கம் அளித்திருக்கிறார்.  அதில்,  ‘’திமுகவில் இணைவது என்று நேற்றைய தினம் கூடி முடிவெடுத்ததில் இருந்து  பின்வாங்குகிறேன்.  நேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு என்பது தவறான விசயம்தான்.  வேறு வழியில்லை.  என் உடல்நலத்தின் மீதான மருத்துவர் ஆலோசனையின் காரணமாகவும்,  குடும்ப எதிர்ப்பின் காரணமாகவும் இன்று மாற்று முடிவை எடுத்திருக்கிறேன்.  பொதுவாழ்வில் இருந்து விலகுகிறேன்.  குடும்ப நிம்மதிக்காக  இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.

திமுகவில் சேர குடும்பத்தினர் எதிர்ப்பு

திமுகவில் சேருவது என்று பேசிமுடித்துவிட்டு வீட்டிற்கு சென்றபோது வீட்டில் என் சொந்தங்கள் அனைவரும் கூடியிருந்தார்கள். அப்போது  குடும்பத்தினர் சொன்னதில் இரண்டு விசயங்கள் என் மனதை வாட்டியது.  ஜெயலலிதாவின் புகைப்படத்தை வீட்டில் இருந்தும் அலுவலகத்தில் இருந்தும் அகற்றுவாயா? என்று என்னைப் பெற்றெடுத்த தாய் கேட்டார். எனக்கு அசிங்கமாக இருக்கிறது,  இதுவெல்லாம் வேலையாப்பா என்று என் மகள் கேட்டார்.    இதனால் இரவு முழுவரும் தூங்க முடியாமல் தவித்தேன்.

 நான் எந்த அரசியில் கட்சியிலும் இனி பயணிக்க மாட்டேன். அண்ணன்  வைத்திலிங்கம் அவர்களும், என்னோடு பயணித்த கழக தொண்டர்களும் அவரவர் விரும்பும் கழகத்தில் இணைந்து பணியாற்றும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் அதிமுக கட்சிக்கு பக்கபலமாக இருந்த குன்னம் ராமச்சந்திரன் விலிகி உள்ளது, அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை  தந்துள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிமுகவின் பலம் குறைந்து காணப்படும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.