மகளிரை போல, ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து உள்ளிட்ட அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

இதனைதொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை சிலவற்றை இன்று அறிவித்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகள் (2026)

​குலவிளக்குத் திட்டம் (பெண்கள் நலன்):

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் (ரேஷன் கார்டு) குடும்பத் தலைவிகளின் வங்கிச் கணக்கில் மாதந்தோறும் ₹2,000 நிதியுதவி வழங்கப்படும்.

ஆண்களுக்கு இலவசப் பேருந்து பயணம்:

தற்போது பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவசப் பேருந்து பயணத் திட்டம் தொடரும் என்றும், கூடுதலாக ஆண்களுக்கும் நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

​அம்மா இல்லம் திட்டம்:

கிராமப்புறங்களில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு, கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
​நகர்ப்புறங்களில் வீடற்றவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு இலவசமாக வழங்கப்படும்.

​அம்மா இருசக்கர வாகனத் திட்டம்:

5 லட்சம் பெண்களுக்கு தலா ₹25,000 மானியத்தில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.

​ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்:

100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பணி நாட்களை 125 நாட்களில் இருந்து 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும்.

தேர்தல் கூட்டணி:

2026 தேர்தலில் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தேர்தலைச் சந்திக்கிறது. இதில் பாமக (PMK), பாஜக (BJP) உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.