பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைந்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
போட்டியில் பல ஊர்களில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு காளைகள், களத்தில் சீறி பாய்ந்து கொண்டிருக்கின்றன.


தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையொட்டி, பொங்கல் விழா, மாட்டுப் பொங்கல், உழவர் திருநாள் என 3நாட்களும் ஜல்லிக்கட்டு திருவிழா கோலகலமாக நடைபெறும்.

அந்த வகையில், பொங்கல் பண்டிகையின் முதல் நாளான இன்று, மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியுள்ளது. திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள பத்ரகாளி அம்மன் கோயில் அருகே உள்ள மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன. ஒரு மணிநேரத்தில் 80 – 90 காளைகள் வரை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டு வருகிறது.

பரிசுகளை தட்டி செல்லும் மாடுபிடி வீரர்கள் – பரிசுகள்

ஜல்லிக்கட்டு போட்டியில் ஒவ்வொரு சுற்றிலும் தலா 50 வீரர்கள் களமிறங்குவர். போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் கார், இருசக்கர வாகனங்கள், பீரோ, கட்டில், தங்க நாணயம், வெள்ளி பொருட்கள் என பல பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்த வருடம் முதல் பரிசாக டிராக்டர் வழங்கப்பட உள்ளது.


பலத்த போலீஸ் பாதுகாப்பு

வாடிவாசலில் இருந்து உறுமிக்கொண்டு ஜல்லிக்கட்டு காளைகள் களத்தில் பாய்ந்து, மாடுபிடி வீரர்களை மிரள வைத்து வருகின்றனர். மாடுபிடி வீரர்களும் துணிச்சலுடன் காளைகளை தழுவி வருகின்றனர். போட்டியை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்துள்ளதால் 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படடுள்ளனர்.