தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியால் (எஸ்ஐஆர்) மன உளைச்சல் அடைந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர் தூக்கிட்டு
தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி (எஸ்ஐஆர்) தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கேரளாவில் இப்பணியில் ஈடுபட்டிருந்த வாக்குச்சாவசடி நிலை அலுவலர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனீஷ் ஜார்ஜ்(50). அரசு ஊழியரான இவர் பையனூர் மண்டலம் 18வது பூத்தின் வாக்குச்சாவடி அலுவலராக செயல்பட்டு வந்தார். இவர் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், சம்பவ நாளன்று அவரது குடும்பத்தினர் தேவாலயம் சென்று விட்டனர்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த அனீஷ் ஜார்ஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீஸார், அனீஷ் ஜார்ஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் உள்ள வேலை அழுத்தம் காரணமாகவே அனீஷ் ஜார்ஜ் தற்கொலை செய்துகொண்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மிரட்டலால் தான் அனீஷ் ஜார்ஜ் தற்கொலை செய்து கொண்டதாக காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் ரஜித் நாரத் தெரிவித்துள்ளார். அனீஷுக்கு உதவச் சென்ற காங்கிரஸ் பூத் லெவல் ஏஜென்ட் வைசாக்கை அழைத்துச் செல்லக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் கேட்டுக் கொண்டனர் என்றும் இதற்கான டிஜிட்டல் ஆதாரங்கள் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், பணி அழுத்தம் காரணமாக அனீஷ் ஜார்ஜ் தற்கொலை செய்யவில்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கேரளாவில் பிஎல்ஓ தற்கொலை செய்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






