Nov 7, 2026 @ 10:27

தவெக ஆட்சியின் நடவடிக்கைகளே வீழ்ச்சிக்கு காரணமாகும்! – டிடிவி தினகரன் கடும் விமர்சனம்

சென்னை:

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக நிர்வாகி பி.எம். மன்னன் கைது செய்யப்பட்ட விவகாரத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாளை ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அதற்கு முன்பாகவே அவர் கைது செய்யப்பட்டதாகவும், அவரை சிறையில் அடைப்பது தொடர்பான விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு கண்டனம் தெரிவித்துள்ளதாகவும் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பேராசிரியரும் பொருளாதார நிபுணருமான கலையரசனின் புகைப்படம் இடம்பெற்றிருந்த காரணத்திற்காக, உரிய விசாரணையின்றி அதிகாலை நேரத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட விவகாரத்தையும் அவர் தனது அறிக்கையில் நினைவுபடுத்தியுள்ளார்.

இதுபோன்ற சம்பவங்களில் நீதிமன்றம் ஏற்கனவே தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள நிலையில், மீண்டும் அதேபோன்ற நடவடிக்கைகள் தொடர்வது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவல்துறை என்பது ஆளுங்கட்சியின் விருப்பத்திற்கேற்ப செயல்படும் அமைப்போ அல்லது அரசியல் பழிவாங்கலுக்கான கருவியோ கிடையாது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தவெக அரசின் தன்னிச்சையான மற்றும் பொறுப்பற்ற செயல்பாடுகளே எதிர்காலத்தில் அந்த ஆட்சியின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் தனது அறிக்கையில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

About The Author