Nov 7, 2026 @ 10:27

பெரியார் அறிவுலக நூல் கொள்முதலில் முறைகேடு? – முழுமையான விசாரணைக்கு மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்!

கோவை: கோவையில் அமைந்துள்ள பெரியார் அறிவுலக நூலகத்திற்கான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் விஜய்க்கு இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரியார் அறிவுலகம் நூலகத்தில் புத்தகங்கள் வாங்கியதில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

300 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட நூலகம்

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கோவை மாநகரில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏழு தளங்களுடன் பெரியார் அறிவுலகம் நவீன நூலகம் கட்டப்பட்டது. இந்த நூலகத்தை கடந்த அக்டோபர் 16ஆம் தேதி முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 4ஆம் தேதி நூலகத்தைப் பார்வையிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் ரீதியான விவாதங்களும் எழுந்தன.

1,800 புத்தகங்கள் குறித்து சந்தேகம்

பெரியார் அறிவுலக நூலகத்தின் நான்காவது தளத்தில் அகல்விளக்கு பதிப்பகம் வெளியிட்டதாகக் கூறப்படும் சுமார் 1,800 புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பதிப்பகத்தின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் போலியானவை என்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் சுட்டிக்காட்டியுள்ளதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்தப் புத்தகங்களை எழுதியதாகக் குறிப்பிடப்படும் எழுத்தாளர்கள் குறித்தும் சந்தேகங்கள் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புத்தகங்களுக்கு அதிக விலை நிர்ணயம் செய்ததாக புகார்

பொதுவாக 300 பக்கங்கள் கொண்ட புத்தகங்கள் முன்னணி பதிப்பகங்களில் 300 முதல் 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் நிலையில், அகல்விளக்கு பதிப்பகத்தின் புத்தகங்களுக்கு 1,400 ரூபாய்க்கும் அதிகமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், சில புத்தகங்களில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உண்மைக்கு மாறானவை என்றும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியான புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பெருமாள் முருகன் சுட்டிக்காட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.

கீழடி அகழாய்வில் நந்தி கண்டறியப்பட்டதாகப் படத்துடன் புத்தகம் வெளியிடப்பட்டிருப்பதும், மகாகவி பாரதியாரின் எழுத்துகளைப் போன்று போலியாக எழுதப்பட்ட புத்தகம் இடம்பெற்றிருப்பதும் அதிர்ச்சியளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும்

புத்தகங்கள் கொள்முதல் செய்வதிலேயே இத்தகைய முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், நூலகக் கட்டுமானப் பணிகளிலும் முறைகேடுகள் நடந்திருக்குமா என்ற கேள்வி எழுவதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

எனவே, பெரியார் அறிவுலகத்தில் உள்ள அனைத்து புத்தகங்களையும் முறையாக ஆய்வு செய்து, போலியான புத்தகங்கள் இருந்தால் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட தமிழகத்தின் பிற நூலகங்களிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்றுள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தனது அறிக்கையில் மாணிக்கம் தாகூர் கேட்டுக்கொண்டுள்ளார்.

About The Author