Nov 5, 2026 @ 18:41

பேரறிவாளனின் பாஸ்போர்ட் விண்ணப்பம்: 4 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை நான்கு வாரங்களுக்குள் பரிசீலித்து உரிய முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து, வெளிநாடு சென்று உயர் கல்வி பயிலத் திட்டமிட்ட அவர், கடந்த 2024-ம் ஆண்டு மே 6-ம் தேதி வழக்கமான நடைமுறையின் கீழ் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தார்.

தொடர்ந்து, 2024-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி தாம்பரம் பாஸ்போர்ட் சேவை மையத்தில் நேரில் ஆஜராகி தேவையான நடைமுறைகளையும் முடித்துள்ளார். இருப்பினும், காவல்துறையின் சரிபார்ப்பு அறிக்கை கிடைக்கவில்லை என்ற காரணத்தைக் கூறி அவரது விண்ணப்பம் நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது.

இதனால் நீண்டகாலமாக பாஸ்போர்ட் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட பேரறிவாளன், தனது விண்ணப்பத்தின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி பி.டி. ஆஷா விசாரித்தார். அப்போது, உச்சநீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறையின் அறிக்கைக்காகக் காத்திருப்பதாகக் கூறி பாஸ்போர்ட் விண்ணப்பத்தை தொடர்ந்து நிலுவையில் வைத்திருப்பது சரியான அணுகுமுறை அல்ல என நீதிபதி கருத்து தெரிவித்தார்.

மேலும், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தாக்கல் செய்த பதில் மனுவையே காவல்துறையின் சரிபார்ப்பு அறிக்கையாகக் கருதி பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, பேரறிவாளனின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை நான்கு வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க தாம்பரம் பாஸ்போர்ட் சேவை மைய அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பாஸ்போர்ட் விண்ணப்ப விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.