September 9, 2026

மருந்து, ஆபரண உற்பத்தி சிறு தொழில்களுக்கு புதிய கொள்கை: தேவைகளை ஆய்வு செய்ய தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் மருந்து மற்றும் தங்கம், வைர ஆபரணங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களின் தேவைகளை ஆய்வு செய்து, அவற்றுக்கேற்ற புதிய கொள்கைகள் மற்றும் ஊக்குவிப்பு திட்டங்களை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வாகன உதிரிபாகங்கள், ஜவுளி, மின் சாதன பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு உற்பத்தித் துறைகளில் முக்கிய பங்காற்றி வருகின்றன. இந்நிறுவனங்கள் சர்வதேச போட்டியை எதிர்கொள்ளும் வகையில் அவற்றின் உற்பத்தித் திறன் மற்றும் போட்டித்திறனை மேம்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, மருந்து உற்பத்தி மற்றும் தங்கம், வைர ஆபரணங்கள் தயாரிக்கும் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கான விரிவான செயல்திட்டம் மற்றும் கொள்கையை தயாரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக தமிழக அரசின் ‘பேம் டி.என்.’ (FaMe TN) நிறுவனம் ஆலோசகர்களை நியமிக்க விருப்பம் தெரிவித்துள்ளது. நியமிக்கப்படும் ஆலோசகர்கள் மாநிலம் முழுவதும் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை, உற்பத்தித் திறன், எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தேவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்வார்கள். அந்த ஆய்வின் அடிப்படையில் தொழில்துறை வளர்ச்சிக்கான செயல்திட்டங்கள் மற்றும் கொள்கை பரிந்துரைகள் தயாரிக்கப்பட உள்ளன.

இந்த பரிந்துரைகளின் அடிப்படையில், புதிய தொழிற்பேட்டைகள் அமைத்தல், முதலீட்டு மானியங்கள், எளிய கடன் வசதிகள் மற்றும் பிற ஊக்குவிப்பு சலுகைகள் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க உள்ளது

You may have missed