திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகல்: பொதுக்குழுவில் தீர்மானம்…

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து தக்க முடிவுகளை கட்சி மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிமுகவின் 32 ஆவது பொதுக்குழு, கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் சென்னை அண்ணா நகர், விஜய்ஸ்ரீ மகாலில் இன்று நடைபெற்றது.

இதில், கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார். பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் செஞ்சி ஏ.கே.மணி, ரொஹையா, மு.பூமிநாதன், சு.ஜீவன், சி.கிருஷ்ணன், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல் தீர்மானத்தில், “மதிமுக, 2017 டிசம்பர் 3 ஆம் தேதி நடந்த உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் கடந்த ஒன்பது வருடங்களாக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்ந்து வந்தது. தமிழ்நாட்டில் மதவாத அரசியல் சக்திகளை காலூன்ற விடாமல் தடுப்பதற்கும், திராவிட இயக்கத்தின் அடிப்படை லட்சியக் கோட்பாடுகளைத் தகர்ப்பதற்கு விடப்படும் அறைகூவல்களை முறியடிக்கவும் மதிமுக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கொள்கை அடிப்படையில் இடம் பெற்று இருந்தது.

கடந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவின் தனித்துவ அடையாளத்தையும், 32 ஆண்டு கால தமிழ்நாட்டு மக்களுக்கான போராட்ட செயல்பாடுகளையும் நீர்த்துப்போக செய்யும் முயற்சிகள் கூட்டணியில் மேற்கொள்ளப்பட்ட போதும் அவற்றைத் தாங்கிக் கொண்டு, எடுத்த முடிவில் உறுதியாக இருந்து சட்டமன்றத் தேர்தலை சந்தித்தோம்.

தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே மே 1ம் தேதி வைகோ ஊடகங்களில் கூறியவாறு தமிழ்நாடு அரசியலில் அதிசயிக்கத்தக்க வகையில் தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்திற்கு பேராதரவை வழங்கி இருந்தனர்.

தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் அரசியல் களத்தில் நடைபெற்ற திரை மறைவு பேரங்கள், மக்கள் வழங்கியத் தீர்ப்புக்கு எதிராக இருந்ததை அனைவரும் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இந்துத்துவ மதவாத சக்திகளோடு கரம் கோர்த்துக் கொண்டு கூட்டணி வைத்து சட்டமன்றத் தேர்தலில், வெறும் 47 இடங்களில் வெற்றி பெற்ற அதிமுகவை ஆட்சி பீடத்தில் அமர்த்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தது ஊரறிந்த ரகசியமே.

இதன் மூலம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, கொள்கை கூட்டணி என்று பிரகடனம் செய்யப்பட்டதெல்லாம், சில அக்கறை உள்ள சக்திகளால் பொருளற்றதாக ஆக்கப்பட்டன.

இந்தச் சூழ்நிலையில், மதிமுக இனியும், திமுக தலைமையிலான கூட்டணியில் தொடரக் கூடாது என்று கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர். எனவே திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வது என்று பொதுக்குழு முடிவு செய்கிறது. தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து தக்க முடிவுகளை கழகம் மேற்கொள்வது என்றும் இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, சட்டமன்றத் தேர்தலில் மதிமுக வேட்பாளர்கள் மு.இராசேந்திரன், செந்தில்செல்வன் ஆகியோரை ஆதரித்து வெற்றி பெறச் செய்த வாக்காளப் பெருமக்களுக்கும், களப்பணியாற்றிய கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி, ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு வாழ்த்துக்கள், காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும், தமிழ்நாட்டில் இதுவரை கடைபிடிக்கப் பட்டு வந்த இரு மொழிக் கொள்கையே தொடரும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதற்கு வரவேற்பு, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும், தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.