சென்னை: தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் லாரிகள் உள்ளிட்ட பெரிய வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வு லாரி உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 60 தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளுக்கான திருத்தப்பட்ட சுங்கக் கட்டண உயர்வு, தற்போது முறைப்படி அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக முக்கிய நகரங்களுக்கு இடையேயான சாலைப் பயணச் செலவுகள் கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த கட்டண உயர்வு சென்னையின் புறநகர்ப் பகுதிகள் மற்றும் தமிழகத்தின் முக்கிய வழித்தடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகள் மற்றும் தாம்பரம் புறவழிச்சாலையில் உள்ள வானகரம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், சென்னை புறவழிச்சாலை வழித்தடத்தில் உள்ள சூரப்பட்டு, நல்லூர், சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் உள்ள பட்டறைபெரும்புதூர் மற்றும் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள சமயபுரம், கப்பலூர், நாங்குநேரி ஆகிய முக்கிய சுங்கச்சாவடிகளிலும் இந்த கட்டண மாற்றம் அமலுக்கு வந்துள்ளது.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் கார்களுக்கான கட்டணத்தில் எந்த மாற்றமும் இன்றி ரூ.75 ஆக தொடர்கிறது. இருப்பினும், பெரிய வாகனப் பிரிவுகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி, சுங்கக் கட்டணத்தில் மாதாந்திர பாஸ் வாங்கும் இலகுரக வணிக வாகனங்களுக்கு ரூ.5-ம், லாரிகளுக்கு ரூ.10-ம் உயர்த்தப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவடைந்த உடனே சுங்கக் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டிருப்பது, பொதுமக்களிடையேயும், குறிப்பாக சரக்கு போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் இடையேயும் பெரும் அதிருப்தியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வணிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More Stories
பெண் விவகாரத்தால் கார் டிரைவர் கொலை?
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்!
பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த ஜெராக்ஸ் கடைக்காரர் கைது…