திருப்பரங்குன்றம் கோயிலில் த.வெ.க அமைச்சருக்காக விதிமீறலா? அறநிலையத்துறை விளக்கம் அளிக்க ஐகோர்ட் ஆணை…

கோயில்களுக்குள் மொபைல் போன் பயன்படுத்தக் தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில், அமைச்சரின் ஆதரவாளர்கள் கருவறை வரை சென்று மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பக்தர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் நிர்மல் குமார் சாமி தரிசனம் செய்தபோது, ஆகம விதிகள் மீறப்பட்டதாகவும், கருவறை வரை செல்போன் பயன்படுத்தப்பட்டதாகவும் எழுந்துள்ள புகார்கள் தமிழக ஆன்மீக மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலானதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இச்சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சென்னையிலிருந்து மே 16-ம் தேதி காலை மதுரை வந்த அமைச்சர் நிர்மல் குமார், திருப்பரங்குன்றம் தொகுதி நிகழ்வுகளில் பங்கேற்ற பின்னர், மதியம் 1:00 மணியளவில் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அவருக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையும் வழங்கப்பட்டது. பொதுவான நடைமுறைப்படி, இக்கோயிலில் மதியம் 12:30 மணிக்கு உச்சிக்கால பூஜை தொடங்கி, 12:45 மணிக்கு ராஜகோபுரத்தின் கீழ் உள்ள மண்டபக் கதவுகள் அடைக்கப்பட்டு நடை சாத்தப்படும்.

பண்டிகை காலங்களில் தவிர மற்ற நாட்களில் இந்த நேரத்திற்குப் பின் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால், நேற்று உச்சிக்கால பூஜை முடிந்து கதவுகள் அடைக்கப்பட்ட பிறகு, மதியம் 1:00 மணிக்கு அமைச்சர் தனது ஆதரவாளர்களுடன் உள்ளே சென்று மூலஸ்தானத்தில் தரிசனம் செய்துள்ளார். அவர் 1:15 மணிக்கு வெளியே வந்த பிறகே கோயில் நடை முறைப்படி சாத்தப்பட்டுள்ளது.

அமைச்சரின் வருகைக்காக விதிகள் தளர்த்தப்பட்டது மட்டுமன்றி, மூலஸ்தானத்தில் அவர் சாமி தரிசனம் செய்த காட்சிகள் வீடியோவாக எடுக்கப்பட்டு இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களுக்குள் செல்போன் பயன்படுத்தவும், புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கவும் நீதிமன்ற உத்தரவின்படி கடுமையான தடைகளும், எச்சரிக்கைப் பலகைகளும் வைக்கப்பட்டுள்ள சூழலில், அமைச்சரின் தொண்டர்கள் கருவறை வரை சென்று மொபைல் போனைப் பயன்படுத்தியது எப்படி என்ற கேள்விகளை பக்தர்கள் எழுப்பியுள்ளனர். மேலும், வழக்கமாக தரிசனம் முடிக்கும் பக்தர்கள் மடப்பள்ளி வழியாகவே வெளியே அனுப்பப்படுவர். ஆனால், அமைச்சருக்காகப் பெரிய நிலைக் கதவுகள் திறக்கப்பட்டு முன்பக்க வாசல் வழியாகவே அவர் வெளியே அழைத்து வரப்பட்டுள்ளார்.

அமைச்சருக்காக விதிமுறை மீறலா? என்ற கேள்வியோடு இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, கோயிலில் அமைச்சர் இருந்தபோது உண்மையில் நடந்தது என்ன? என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் என்ற காரணத்திற்காகக் கோயிலின் ஆகம விதிகளும், பாதுகாப்பு நடைமுறைகளும் மீறப்பட்ட விவகாரம் த.வெ.க அரசுக்கும், கோயில் நிர்வாகத்திற்கும் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு அமைச்சர் நிர்மல் குமார் வருத்தம் தெரிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது