தேர்வு தோல்வி பயத்தில் 7 மாணவர்கள் தற்கொலை…

தமிழகம் முழுவதும் தோல்வி பயத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 7 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வெறும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகம் முழுவதும் நேற்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தேர்வு தோல்வி பயம் மற்றும் மதிப்பெண் குறைந்ததால் 7 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சுமார் 8.70 லட்சம் மாணவர்களால் எழுதப்பட்ட பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 94.31% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல இந்த ஆண்டும் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதனிடைய தமிழகம் முழுவதும் தோல்வி பயத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 7 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வெறும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள வீ.சி மோட்டூர் என்ற பகுதியைச் சேர்ந்த ரேணுகோபால் -சசிகலா தம்பதியரின் மகள் மாதவி (வயது 15), வாலாஜாபேட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதியிருந்தார். நேற்று வெளியான தேர்வு முடிவுகளில் நான்கு பாடங்களில் மட்டுமே மாதவி தேர்ச்சி அடைந்தார். சமூக அறிவியல் பாடத்தில் அவர் தோல்வி அடைந்திருந்தார். இதனால் மனமுடைந்த மாதவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு அடுத்த கரடிப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான நாராயணன் என்பவரின் மகன் லத்தீஷ் (வயது 15). இவர் ஊத்துக்கோட்டை அடுத்துள்ள பாலவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். நேற்று வெளியான தேர்வு முடிவுகளில் லத்தீஷ் தமிழ் மற்றும் கணிதம் ஆகிய இரண்டு பாடங்களில் தோல்வியடைந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் தனது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டி – ரஞ்சிதம் தம்பதியரின் மகன் கேசவன், பழனியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

கேசவன் நேற்று முன்தினம் இரவு, தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தின் காரணமாக வீட்டில் உள்ள அறையில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே நேற்று தேர்வு முடிவு வெளியான நிலையில் கேசவன் தமிழ் பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறவில்லை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுனரான பாலமுருகன் என்பவரின் மகன் அஸ்வின். இவர் உசிலம்பட்டியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அஸ்வின் தேர்வு தோல்வி பயத்தால் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் நேற்று தேர்வு முடிவு வெளியானதில் அஸ்வின் 298 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றது தெரிய வந்தது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மிளகனூர் அருகே உள்ள புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஹோட்டல் தொழிலாளியான கிட்டு என்பவரின் மகள் ஷாலினி (வயது 15). இவர் விருதுநகர் மாவட்டம் கட்டணூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கணிதப் பாடத்தில் மட்டும் மாணவி ஷாலினி தோல்வி அடைந்தார். இதனால் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி மாவட்டம் ஜருகு அருகே உள்ள குரும்பட்டியான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவரின் மகள் நிஷா. இவர் ஜருகு அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். நேற்று தேர்வு முடிவுகள் வெளியானதில் மாணவ நிஷா 373 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். எனினும் மதிப்பெண்கள் குறைந்ததால் மாணவி நிஷா தற்கொலை செய்து கொண்டார்.

இதேபோல தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே முள்ளுக்காடு பகுதியைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகன் சஞ்சய். நேற்று வெளியான தேர்வு முடிவுகளில் சஞ்சய் 464 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார். எனினும் மதிப்பெண்கள் அதிகமாக எடுக்க முடியாத விரத்தில் சஞ்சய் வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்