லெமூர் கடற்கரையில் ராட்சச அலையின் வேகம் தாங்காமல் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட இரண்டு குழந்தைகளை, போராடி காப்பாற்றிய தீயணைப்பு வீரர் ராஜசேகருக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள லெமூர் கடற்கரை தென்மாவட்டங்களின் மிக முக்கியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. நடப்பு கோடைகால விடுமுறையையொட்டி, தினசரி ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் இந்தச் கடற்கரைக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், மாலை லெமூர் கடற்கரைக் கரையில் இரண்டு சிறு குழந்தைகள் தங்களது பெற்றோருடன் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, கடலில் திடீரென எழும்பிய ஒரு பயங்கரமான ராட்சச அலை கரையில் நின்றிருந்த அந்த இரண்டு குழந்தைகளையும் விநாடிப் பொழுதில் கடலுக்குள் இழுத்துச் சென்றது.
கண்ணிமைக்கும் நேரத்தில் குழந்தைகள் இருவரும் கடலின் ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டு உயிருக்குப் போராடியதைக் கண்டு, கடற்கரையில் இருந்த பெற்றோரும் மற்ற சுற்றுலாப் பயணிகளும் அலறியடித்துக் கூச்சலிட்டனர். அப்போது, அங்குப் பேரிடர் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை வீரர் ராஜசேகர், துளியும் தாமதிக்காமல் உடனடியாகக் கடலில் குதித்து இரண்டு குழந்தைகளை பத்திரமாக மீட்டார்.
கரைக்குக் கொண்டு வரப்பட்ட குழந்தைகளுக்கு உடனடியாக முதலுதவிச் சிகிச்சைகள் வழங்கப்பட்டுப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தகுந்த நேரத்தில் சமயோசிதமாகச் செயல்பட்டு, இரண்டு குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரர் ராஜசேகரின் வீர தீர முயற்சியைப் பாராட்டி, கடற்கரையில் இருந்த பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் அவருக்குக் கைதட்டி நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

More Stories
டாஸ்மாக் கடைகளில் 54 புதிய பிராண்ட் மது வகைகளை விரைவில் அறிமுகப்படுத்த முடிவு
மரணத்திலும் இணைபிரியாத தம்பதி: மனைவி இறந்த 3 மணி நேரத்தில் கணவர் உயிர் பிரிந்தது!
“அமைச்சர் பதவிக்காக தவெகவுக்கு சென்றோருக்கு விஜய் கொடுத்தது அல்வா” – பழனிசாமி…