September 10, 2026

12th ரிசல்டில் தட்டித்தூக்கிய அரசுப் பள்ளி மாணவர்கள்…

தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2ஆம் தேதி தொடங்கி மார்ச் 26ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். தொடர்ந்து விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன.

இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக 95.20 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 93.19 சதவீதமும், மாணவிகள் 97 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அந்த வகையில், தமிழகத்தில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகள் சிறப்பான தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்து கவனம் ஈர்த்துள்ளன. அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகித அடிப்படையில் ஈரோடு மாவட்டம் 98.87 சதவீத தேர்ச்சியுடன் மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் 98.05 சதவீத தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தையும், திருச்சி மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.

மாணவர்களின் தொடர்ச்சியான உழைப்பு, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பள்ளி நிர்வாகத்தின் திட்டமிட்ட பயிற்சிகள் ஆகியவை இந்த சாதனைக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக கல்வியில் சிறப்பான சாதனைகளை படைத்து வருவது கல்வித்துறையில் பாராட்டைப் பெற்றுள்ளது.’

இந்த சாதனையை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும், மாணவர்களின் எதிர்கால கல்வி முன்னேற்றத்தில் அரசு பள்ளிகள் முக்கிய பங்காற்றி வருவதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

You may have missed