திமுக முதல்வரும், முதல்வருமான முக.ஸ்டாலின் தலைமையில், கடந்த 20ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற பரப்புரை பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.

234 சட்டமன்றத் தொகுதிகளும் ‘டார்கெட்’
இந்த பரப்புரையின் கீழ், கழகத் தலைவர் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நட்சத்திரப் பரப்புரையாளர்கள், தமிழகத்திலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், பிப்ரவரி மாதம் முழுவதும் தீவிரமான பரப்புரை பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரப்புரையின் போது, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும், ஒரு பொதுக் கூட்டம் நடத்திட வேண்டும் என்றும் திமுக நிர்வாகிகளிடம் தலைமைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

திமுக தலைமையின் வியூகம்
மேலும், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள், மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொழில் முனைவோர், கல்வியாளர்கள் உள்ளிட்டோரை ஒரே இடத்தில் அழைத்து, மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் (அ) பொறுப்பாளர்கள் மற்றும் நட்சத்திரப் பரப்புரையாளர்கள் அரசின் சாதனைகளை எடுத்துக்கூறியும், கலந்துகொள்வோரின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் குறித்தும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டுமென்றும் திமுக தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
“தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரையை வெற்றியடையச் செய்திடும் வகையில் பரப்புரை குறித்து தக்க விளம்பரங்களைச் செய்திடவும், தொகுதிகளில் தேவையான ஏற்பாடுகளைச் செய்திடவும் மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் (அ) பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.






