“பாஜக, பாமக இருக்கும் அணியில் இடம்பெறமாட்டோம் என்று 14 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவில், நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பாமக ராமதாஸ் – திருமாவளவன் சேர்வார்களா?
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஒரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. அதிமுக கூட்டணி ஏறத்தாழ முடிவாகி விட்டது. தேமுதிக கட்சி கூட்டணி குறித்து இன்னும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில், திமுக கூட்டணி இன்னும் முழு வடிவம் பெறாமல் இருக்கிறது. காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, முஸ்லீம் லீக், தவாக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இருந்தாலும், தேமுதிக மற்றும் பாமக ராமதாஸ் அணியை கூட்டணியில் கொண்டு வர திமுக தீவிரமாக பணியாற்றி வருகிறது. ஆனால் ராமதாஸ் அணி திமுக கூட்டணிக்குள் வந்தால், அதனை விசிக ஏற்குமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. ஏனென்றால் அன்புமணி தரப்பு பாமக அதிமுகவுடன் இணைந்துள்ளது.

14 ஆண்டுக்களுக்கு முன்பே..!
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த; விசிக தலைவர், தொல்.திருமாவளவன், “பாமக ராமதாஸ் அணியை கூட்டணியை இணைத்துக் கொள்வது தொடர்பாக திமுக தலைமையே முடிவு செய்ய வேண்டும் என்றார்.
நாங்கள் எந்த முடிவு எடுக்கக் கூடிய நிலை இல்லை என்றும், நாங்கள் 14 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்துவிட்டோம், அந்த முடிவில் உறுதியாக இருக்கிறோம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். அதேபோல் திமுக தரப்பில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.






