April 25, 2026

100 சதவீதம் ஓட்டுப்பதிவு… வாக்காளர்களுக்கு தேர்தல் அதிகாரிகள் பாராட்டு

 
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. மாநிலம் முழுவதும் 85 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 11 சட்ட சபை தொகுதிகளில் 90.76 சதவீதம் வாக்குப்பதிவு நடந்தது. இது கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை காட்டிலும் 7 சதவீதம் அதிகமாகும்.

சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழக அளவில் வீரபாண்டி தொகுதியில் 93.43 சதவீதம் வாக்குகள் பதிவாகி முதலிடம் பிடித்துள்ளது. மாவட்டத்தில் குறைந்த பட்சம் சேலம் வடக்கு தொகுதியில் 87.4 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

குறிப்பாக, ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட ஏற்காடு மலையில் உள்ள கொம்புதூக்கி மலைக்கிராமத்தில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி வாக்குச்சாவடியில் 160 ஆண்கள், 141 பெண்கள் என 301 பேரும் வாக்களித்துள்ளனர். இதனால் இந்த வாக்குச்சாவடியில் 100 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

ஏற்காடு தொகுதிக்குட்பட்ட கொம்புதூக்கி மலைக்கிராமத்தில் ஓட்டுரிமை உள்ள அனைவரும் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி சாதனை படைத்துள்ளனர். இதனால் அந்த மலைக்கிராம மக்களை தேர்தல் பிரிவு அதிகாரிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். சேலம் மாவட்டத்தில் ஏற்காடு தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 72 ஆயிரத்து 829 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 80 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இது 92.03 சதவீதம் ஆகும்.

ஏற்காடு மலைக்கிராமத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளும் ஏற்காடு தாலுகாவிற்குள் அமைகிறது. அதன்படி ஏற்காடு தாலுகாவில் உள்ள 49 வாக்குச்சாவடிகளில் 30 ஆயிரத்து 347 பேர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதில், 94 சதவீதம் பேர் அதாவது 28 ஆயிரத்து 478 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.