வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதால் மனமுடைந்த முதியவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் மேற்கு வங்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணிகள் நடந்து முடிந்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் பல லட்சக்கணக்கான வாக்காளர் நீக்கப்பட்டுள்ளதால், வாக்காளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 58 லட்சம் பேர் வரை நீக்கப்பட்டனர்.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லாத கவலையில் புருலியா மாவட்டத்தைச் சேர்ந்த துர்ஜன் மாஜி(82) என்ற முதியவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2002-ம் ஆண்டிலிருந்து அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்துள்ள நிலையில், எஸ்ஐஆர் பணியில் அவர் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அவர் பெயர் நீக்கப்பட்டதால்,விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த துர்ஜன் மாஜி, விசாரணைக்குச் செல்ல வாகன வசதியில்லாததாலும், தனக்கு வாக்குரிமை பறிபோய் விடுமோ என்ற அச்சத்தாலும் மன உளைச்சலில் இருந்ததாக அவரது மகன் தெரிவித்துள்ளார். இதனால் அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது மகன் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் மேற்கு வங்க மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். எஸ்ஐஆர் நடைமுறை ஏழை, எளிய மக்களை துன்புறுத்துவதாகவும், இதுவரை 60 பேர் இதனால் உயிரிழந்ததாகவும் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். துர்ஜன் மாஜி தற்கொலை செய்து கொண்டதையடுத்து 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளை நேரடி விசாரணைக்கு அழைக்க வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






