சவுதி அரேபியாவில் இன்று அதிகாலை டீசல் டேங்கர் மீது பேருந்து மோதியதில் 42 இந்தியர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவின் மிக முக்கியமான இஸ்லாமிய புனித நகரமாக மதீனா திகழ்கிறது. மெக்காவுக்கு அடுத்தபடியாக இஸ்லாமியர்களுக்கு மிகவும் புனிதமான இடமாக கருதப்படும் மதீனாவுக்கு அருகே உம்ரா புனித பயணம் சென்றவர்களின் பேருந்து, டீசல் டேங்கர் லாரி மோதி பயங்கர விபத்திற்குள்ளானது. இந்த விபத்து மதீனாவிலிருந்து சுமார் 160 கி.மீ தொலைவில் உள்ள முஹர்ராஸ் அருகே, இந்திய நேரப்படி அதிகாலை 1:30 மணியளவில் நடந்தது. அந்த நேரத்தில் பேருந்தில் பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தனர்.

இதனால் பேருந்து முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதில் பயணம் செய்த 42 இந்தியர்களும் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களில் 20 பேர் பெண்கள் என்றும், 11 பேர் குழந்தைகள் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த பேருந்தில் பயணம் செய்தவர்கள் பெரும்பாலானவர்கள் தெலங்கானா மற்றும் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த விபத்தில்  காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும் தேவையான உதவிகளைச் செய்வதற்கும் தூதரகத்துடன் நெருக்கமாக பணியாற்றுமாறு தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி புதுடெல்லியில் உள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விபத்து குறித்து தகவல் அறிய 24 மணி நேரம் இயங்கும் உதவி எண்ணை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகம் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள 8002440003 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தகவல் தேடும் குடும்பங்களுக்காக தெலங்கானா அரசு செயலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. இதற்காக 79979 59754, 99129 19545 என்ற தொடர்பு எண்களையும் அறிவித்துள்ளது. இந்திய உம்ரா யாத்ரீகர்களின் மரணம் குறித்து ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் அசதுதீன் ஒவைசி வருத்தம் தெரிவித்துள்ளார்.