ராஜபாளையம் அருகே தனியார் நர்சிங் கல்லூரியில் மாட்டு வண்டி சவாரி, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் கேரள மாணவிகள் – தமிழ் மாணவிகள் இணைந்து பொங்கல் விழாவை வெகு விமரிசையாக கொண்டாடினர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மொட்டை மலையில் இயங்கும் தனியார் பெண்கள் நர்சிங் கல்லூரியில் இந்த பொங்கல் விழா நடைபெற்றது. கல்லூரி மைதானத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் 54 பானைகளில் பொங்கல் வைத்தனர்.
வட்டாட்சியர் ராஜீவ் காந்தி, கல்லூரி தாளாளர் சுரன் ராஜா மற்றும் பேராசிரியர்கள் விழாவில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக ‘பொங்கலோ..! பொங்கல்..! என முழக்கமிட்டனர்.

பின்னர் மாட்டு வண்டிகளில் மாணவிகள் அமர்ந்து பறை இசை மற்றும் கேரள செண்டை மேளம் முழங்க மைதானத்தை சுற்றி ஊர்வலமாக வந்தனர்.
ஊர்வலத்திற்கு முன்னதாக மயில் ஆட்டம், ரிஷப ஆட்டம், ஒயிலாட்டம், சிலம்பம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
பொங்கல் விழாவை கேரளத்தை சேர்ந்த மாணவிகள், தமிழ் மாணவிகளுடன் சேர்ந்து கொண்டாடியது ‘இது ஒற்றுமையின் திருவிழா’ என்று பாராட்டப்படுகிறது.






