சென்னையை அடுத்து திருப்போரூரில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது.

சென்னை தாம்பரத்தில், இந்திய விமான படையின் விமானப்படை தளம் உள்ளது. இங்கு விமானப்படை வீரர்களுக்கு, விமானம் இயக்குதல் உட்பட, பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இங்குள்ள வீரர்கள், தொடர் விமான பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். நேற்று பகல், 1:30 மணிக்கு, இந்த தளத்திலிருந்து, ‘பிளேட்டஸ் பி.சி.7’ என்ற பயிற்சி விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.

அப்போது மாமல்லபுரம் அருகே திருப்போரூர் அடுத்த தனியார் உப்பளம் தொழிற்சாலை அருகே விமானம் வெடித்து சேற்றில்  விழுந்தது. அப்போது விமானத்தில் இருந்த விமானி பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த விபத்தில் விமானம் அப்பளம் போல நொறுங்கியது. விமான விபத்து ஏற்பட்ட இடத்தில் திருப்போரூர் காவல் துறை மற்றும் தீயணைப்புதுறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் விமான விபத்து ஏற்பட்ட இடத்தில் இரண்டாவது நாளாக விமானப்படை அதிகாரிகள் 50-க்கும் மேற்பட்டோர் ஜேசிபி இயந்திர உதவியுடன் கருப்பு பெட்டியை தேடும் பணியில் இன்று ஈடுபட்டனர். தற்போது விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டது. விசாரணைக்கு பிறகு விபத்திற்கான காரணம் தெரியவரும் என்று விமான படை அதிகாரிகள் தெரிவித்தனர்.