தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் இருந்து 10 வேட்பாளர்களின் பெயர்களை விஜய்யால் சொல்ல முடியுமா என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (டிசம்பர் 25) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ” சட்டமன்றத் தேர்தலில் திமுக, தவெக இடையேதான் போட்டி விஜய் சொல்லி வருகிறார். இந்தியாவையே நாளை பிடித்து விடுவேன் என்று கூட விஜய் சொல்லலாம்.. ஆனால், இது சினிமா அல்ல.
தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும், வேட்பாளர்கள் அறிவிக்க வேண்டும். அத்துடன் வேட்பாளர்கள் விலைபோகாமல் இருக்க வேண்டும். மொத்தமுள்ள 234 தொகுதிகளில் இருந்து 10 வேட்பாளர்களின் பெயர்களை விஜய்யால் சொல்ல முடியுமா? கட்சிக்கு வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் இருக்க வேண்டும். தவெகவில் கட்டமைப்பே கிடையாது. குறையாக சொல்லவில்லை.
எங்கள் கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி.தினகரனும் தற்போதைக்கு இல்லை. அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக வெளிவரும் தகவலில் உண்மை இல்லை. 2026 -ம் ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மாற்று அரசாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். இந்த கருத்துள்ள எல்லோரும் ஒன்றாக இணைய வேண்டும் ” என்றார்.





