கரூர் வழக்குத் தொடர்பான விசாரணைக்கு டெல்லி அலுவலகத்தில் டிச.29-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு தவெக நிர்வாகிகள் உள்பட 8 பேருக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஏற்பட் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 110 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்குத் தொடர்பாக கரூரில் முகாமிட்ட சிபிஐ அதிகாரிகள், தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், இணைப்பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.
அடுத்தக்கட்ட விசாரணைக்காக தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் கரூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 8 பேர் டிசம்பர் 29-ம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகம் நேரில் ஆஜராகுமாறு சிபிஐ தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தவெக தலைவர் விஜய்க்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஜனவரி முதல் வாரத்தில் அவர் டெல்லி அலுவலகத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





