செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம், அதிமுக கட்சியின் கூட்டணி பலத்தை காட்டுகிறது.

​தேர்தல் பிரசாரத் தொடக்கம்

​2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் தேர்தல் பிரசாரக் கூட்டமாக இது அமைந்தது. மதுராந்தகத்தை “ஏரி காத்த ராமர் பூமி” எனக் குறிப்பிட்டு பிரதமர் மோடி தனது உரையைத் தொடங்கினார்.

ஒரே மேடையில் கூட்டணித் தலைவர்கள்

​நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதிமுக மற்றும் பாஜக கூட்டணித் தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்றது இந்த விழாவின் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்): பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்ததுடன், “பிரதமர் கால் வைத்ததும் மேகம் சூரியனை மறைத்துவிட்டது, இது வெற்றிக்கான அறிகுறி” எனப் பேசினார். ​டிடிவி தினகரன் (அமமுக)  இக்கூட்டத்தில் பங்கேற்றார். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் கைகுலுக்கிக் கொண்டது அரசியல் வட்டாரத்தில்  பரபரப்பை ஏற்படுத்தியது.

​அன்புமணி ராமதாஸ் (பாமக), ஜி.கே. வாசன் (தமாகா) மற்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் போன்ற கூட்டணித் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

​பிரதமர் மோடி பேச்சு

​பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, “தமிழக மக்கள் மாற்றத்திற்குத் தயாராகிவிட்டார்கள் என்றும், குடும்ப ஆட்சியை வீழ்த்த மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்றும் ஆவேசமாகப் பேசினார்.
​மேலும், இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் என்பதால், சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்களிப்பையும் வீரத்தையும் பிரதமர் மோடி வெகுவாகப் பாராட்டினார்.

​திமுக மீது விமர்சனம்:

தமிழுக்கும் தமிழ் பண்பாட்டிற்கும் திமுக அரசு எதிரியாகச் செயல்படுவதாக திமுகவை பிரதமர் குற்றம் சாட்டினார். 

வலுவான கூட்டணியில் அதிமக

​இந்தக் கூட்டத்தின் மூலம் தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2026 தேர்தலில் ஆளும் திமுக அரசுக்கு எதிராக ஒரு வலுவான கூட்டணியை அமைப்பதற்கான அடித்தளமாக இந்த மதுராந்தகம் விழா அமைந்துள்ளது.

வலுவில்லாத திமுக கூட்டணி

ஒரு பக்கம் அதிமுக கூட்டணி வலுவாக அமைத்துள்ளது. இன்னொரு பக்கம் திமுக கூட்டணி இன்னும் சரியாக முடிவாகாமல் உள்ளது.

திமுகவுடன், விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணியில் உள்ளனர். காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்தாலும் தவெக பக்கம்போய் விடலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இன்னும் சில கட்சிகள்; அமைப்புகள் தங்கள் முழு ஆதரவை இன்னும் அறிவிக்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் திமுக கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.