ஓடும் ரயிலில் வடமாநிலத்தவரை 4 சிறுவர்கள் பட்டாகத்தி கொண்டு கொடூரமாக தாக்கி சம்பவத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது கண்டனத்தையும், வடமாநிலத்தவர் குறித்த தனது அனுபவங்களையும் தெரிவித்துள்ளார்.
ஓடும் ரயிலில் சிறார்களின் வெறிச்செயல்
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுராஜ் என்பவர், கடந்த 27-ஆம் தேதி சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் ரயிலில் அவர் பயணம் செய்தார். அப்போது திருத்தணி இரயிலில் ஏறத்தாழ 17 வயதுடைய 4 சிறார்கள் பட்டாக் கத்திகளை கொண்டு சுராஜை கடுமையா, சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் முகம், கை என பல்வேறு இடங்களில் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றார்.
பல்வேறு தரப்பினரும் கண்டனம்
இந்தக் கொடூர தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு அரசியல், சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் அவரது கண்டனத்தையும், தனது அனுபவங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

“பொறுப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது’
அதில், “சென்னையில் நான் வசிக்கும் பகுதி, போதைப்பொருளுக்கு அடிமையான குண்டர்கள் மற்றும் குற்றவாளிகளால் மிக அபாயகரமானதாக இருக்கிறது.
எனது ஸ்டுடியோ பகுதியில் உள்ள பல அப்பாவி கட்டுமானத் தொழிலாளர் நண்பர்கள், சமீபத்தில் பல முறை தாக்கப்பட்டனர். இந்தத் தாக்குதல்காரர்களில் பெரும்பாலானோர் இனவெறியர்களாக இருப்பதற்கு பெருமைப்படுகிறார்கள்; மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மக்களை ஒட்டுமொத்தமாக வெறுத்துத் தாக்குகிறார்கள்.

இத்தகையவர்களுக்கு ஆதரவாக பல உள்ளூர் அரசியல் குழுக்களும், சாதி அடிப்படையிலான அமைப்புகளும் ஓடி வருகின்றன. இதை ஏற்றுக்கொண்டு உண்மை நிலையை புரிந்து பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற முடியாதா?
நான் உட்பட அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது..!” என்று பதிவிட்டுள்ளார்.






