டெல்லி ஏ.ஐ (AI) மாநாட்டை கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்த மாநாட்டில், ‘Galgotias’ பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் ரோபோ நாயை ஒன்றை காட்சிப்படுத்தினர். அந்த ரோபோவுக்கு ‘ஓரியன்’ என்று பெயர் வைத்திருப்பதாகவும், இது Galgotias பல்கலைக்கழகத்தின் ‘Center of Excellence’ குழுவினரால் முழுமையாக உருவாக்கப்பட்டது என்றும் தெரிவித்திருந்தனர்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் இதற்காக பெருமிதம் அடைந்து பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

சீன ‘ரோபோ நாய்’
ஆனால், இந்த ரோபோவை தயாரித்தது சீனாவை சேர்ந்த ‘UNITREE’ எனும் நிறுவனம். இந்த ரோபோட்டின் பெயர் ‘UNITREE GO2’ என்பது தெரியவந்தது.
இதையடுத்து தங்களின் சொந்தத் தயாரிப்பாக காட்சிப்படுத்திய Galgotias பல்கலைக்கழகத்தின் அரங்கை உடனடியாகக் காலி செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதுக்கு ஒருபடி மேலே ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், அந்த பெருமிதப் பதிவையும் நீக்கிவிட்டார்.
வெளிநாட்டு தயாரிப்புகளை வாங்குவது இயல்பான ஒன்றுதான். அதில் தவறு கிடையாது. ஆனால், அந்நாட்டு தயாரிப்புகளை தங்களுடையது என்று உரிமை கோருவதுதான் தவறு என்று கல்வியாளர்களும் அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மன்னிப்பு கோரி – விளக்கம்
டெல்லி ஏஐ மாநாட்டில் சீன ரோபோவை தங்கள் கண்டுபிடிப்பாக முன்னிறுத்தியதற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக Galgotias பல்கலைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
‘அரங்கில் இருந்த எங்கள் பிரதிநிதிக்கு போதிய தகவல்கள் தெரிந்திருக்கவில்லை; கேமரா முன்னால் நிற்கும் உற்சாகத்தில்
அவர் சில தவறான தகவல்களை கூறிவிட்டார்’ என்று Galgotias பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது.






