முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான 3ஆம் கட்ட வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்.

​ஏற்கனவே இரண்டு கட்டங்களாக 11 முக்கிய வாக்குறுதிகளை அறிவித்திருந்த நிலையில், இன்று மேலும் 5 அதிரடித் திட்டங்களை அவர் அறிவித்துள்ளார். இதன் மூலம் அதிமுகவின் மொத்த தேர்தல் வாக்குறுதிகளின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது.

​ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹10,000 நிவாரணம்

​கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு, சொத்து வரி மற்றும் மின்கட்டண உயர்வால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்தச் சுமையைக் குறைக்க, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹10,000 ஒருமுறை நிவாரணத் தொகையாக வழங்கப்படும்.

 பட்டதாரி இளைஞர்களுக்கு நிதியுதவி

​வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காகக் காத்திருக்கும் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ₹2,000 உதவித்தொகை வழங்கப்படும். அதேபோல், மேல்நிலைக் கல்வி (12-ஆம் வகுப்பு) முடித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு மாதம் ₹1,000 வழங்கப்படும்.

பொங்கல் பரிசுடன் ₹1,000 ரொக்கம்

​ஆண்டுதோறும் வழங்கப்படும் பொங்கல் தொகுப்புடன், கூடுதலாக ₹1,000 ரொக்கப் பணம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும்.

​நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் உயர்வு

  • ​கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் இலவச மின்சாரம் 300 யூனிட்டிலிருந்து 450 யூனிட்டாக உயர்த்தப்படும்.
  • ​விசைத்தறி நெசவாளர்களுக்கு 1,000 யூனிட்டிலிருந்து 1,400 யூனிட்டாக இலவச மின்சாரம் உயர்த்தி வழங்கப்படும்.

​மீனவர்களுக்கான உதவித்தொகை அதிகரிப்பு

​மீன்பிடி தடைக்காலத்தின் போது மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ₹8,000-லிருந்து ₹12,000-ஆக உயர்த்தப்படும்.

முக்கியக் குறிப்பு: இதற்கு முந்தைய கட்டங்களில், “மகளிருக்கு மாதம் ₹2,000 உரிமைத் தொகை”, “ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள்”, மற்றும் “முதியோர் ஓய்வூதியம் ₹2,000-ஆக உயர்வு” போன்ற வாக்குறுதிகளை அவர் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

​திமுக அரசின் மீதான வரி உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை மையமாக வைத்தே இந்த 3ஆம் கட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.