செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
மோடி தமிழகம் வருகை
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அவருடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளும்; அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
காங்கிரஸ் – தீப்பந்தப் போராட்டம்
இந்நிலையில் நேற்று இரவு, பிரதமர் மோடி வருகை, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கம், மாநில அரசுக்கு அளிக்க வேண்டிய நிதியை, அளித்தாததை கண்டித்தும், காஞ்சிபுரம் முன்னாள் எம்.பியும், தேசிய செயலாளருமான விஸ்வநாதன் தலைமையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தீப்பந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

காங்கிரஸ் கட்சியினர் கைது
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன் தலைமையில் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்து, பின்னர் விடுவித்தனர்.
பொதுக்கூட்டத்திற்கு பிரதமர் மோடி மதுராந்தகம் வந்து கூட்டத்தில் கலந்து கொண்டு பிறகு அங்கிருந்து செல்லும் வரை, செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகளின் நடவடிக்கைகளை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.






