2026-ம் ஆண்டு மேற்குவங்கத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

இது தொடர்பாக மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் அமித்ஷா இன்று (டிசம்பர் 30) செய்தியாளர்களிடம் கூறுகையில், ” மேற்கு வங்க மாநிலத்தில் பயம், ஊழல் உச்சத்தில் உள்ளது. நல்லாட்சியை கொண்டு வருவதற்கு மேற்கு வங்க மக்கள் உறுதியேற்றுள்ளனர். நாங்கள் ஊடுருவல்காரர்களை அடையாளம் காண்பது மட்டுமல்லாமல், அவர்களை வெளியேற்றுவோம். தேர்தல் ஆதாயத்திற்காக முதலமைச்சர் மம்தா வங்கதேசத்தை சேர்ந்த ஊடுருவல்காரர்களுக்குத் துணைபோகிறார்.

2026-ம் ஆண்டு மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி அமையும். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், கிழக்கு எல்லைகள் வழியாக நடைபெறும் ஊடுருவலை நிறுத்தி, மாநிலம் புத்துயிர் பெறுவதை உறுதி செய்யும். மேற்கு வங்க அரசு எங்களுக்கு நிலம் வழங்காததால், வங்கதேச எல்லையில் வேலி அமைக்கும் பணியை எங்களால் முடிக்க முடியவில்லை. மேற்குவங்க மக்கள் காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு ஆட்சி செய்ய வாய்ப்பளித்துள்ளனர்.

பாஜகவுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். மம்தா தலைமையிலான அரசின் ஊழல் காரணமாக மேற்குவங்கத்தில் வளர்ச்சி தடைபட்டுள்ளது. ஏழை மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிப்போம். கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், பாஜக 17 சதவீத ஓட்டுக்களையும், இரண்டு இடங்களையும் பெற்றது.கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி 10 சதவீத ஓட்டுக்களையும் 3 சட்டமன்ற இடங்களையும் பெற்றது. 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், பாஜக 41 சதவீத ஓட்டுக்களையும், 18 இடங்களையும் பெற்றது.

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜக 21 சதவீத ஓட்டுக்களையும், 77 இடங்களையும் பெற்றது. 2016-ம் ஆண்டு 3 இடங்களைப் பெற்ற கட்சி, ஐந்து ஆண்டுகளில் 77 இடங்களைப் பெற்றது. 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், பாஜக 39 சதவீத ஓட்டுக்களையும், 12 இடங்களையும் பெற்றது. 2026-ம் ஆண்டு மேற்குவங்கத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும்” என்றார்.