மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டத்தில் உள்ள திரளி பெரிய கண்மாய், அரசு அதிகாரிகளின் ஆசியுடன் கனிமவளக் கொள்ளையர்களின் வேட்டைக்காடாக மாறியுள்ளது.
திருமங்லம் – தென்காசி,நான்கு வழிச் சாலைப் பணிக்காக வழங்கப்பட்ட அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, நீர்நிலையின் தரைமட்டத்தையே சிதைத்து வரும் அவலம் அரங்கேறி வருகிறது.

சுமார் 4 மீட்டர் ஆழம்: இது அரசாங்க அனுமதியா? அல்லது சட்டவிரோதச் சுரண்டலா?
கடந்த ஜனவரி 20-ஆம் தேதி, சமூக ஆர்வலர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் அதிர வைக்கும் உண்மைகள் வெளிவந்தன. அரசு விதிமுறைப்படி 1 மீட்டர் மட்டுமே மண் எடுக்க அனுமதி உள்ள நிலையில், ALR Construction என்ற தனியார் நிறுவனம் சுமார் 4 மீட்டர் ஆழத்திற்கும் மேலாக ராட்சதப் பள்ளங்களை உருவாக்கியுள்ளது. இது குறித்த புகார்கள் GPS புகைப்பட ஆதாரங்களுடன் மாவட்ட கனிமவளத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

RTI அம்பலப்படுத்திய அதிகாரிகளின் ‘பச்சைப் பொய்’
இந்த விவகாரத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதில்கள், அதிகாரிகளின் மெத்தனப் போக்கை அப்பட்டமாகத் தோல் உரித்துக் காட்டியுள்ளன.

கள ஆய்வு நடத்தாத அதிகாரிகள்:
புகார் அளிக்கப்பட்டு ஒரு மாதமாகியும், ‘நேரம் இல்லை’ என்பது போல இதுவரை ஒரு அதிகாரி கூட அந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்யவில்லை என்பதை RTI பதிலிலேயே ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஆதாரங்கள் ‘யூகம்’ என மழுப்பல்: கையில் புகைப்பட ஆதாரங்கள் இருந்தும், அதை “யூகத்தின் அடிப்படையிலான புகார்” என அதிகாரிகள் தள்ளுபடி செய்திருப்பது, அவர்கள் யாருக்குத் துணை போகிறார்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

“ஜியோ நியூஸ் தமிழ்” செய்தி எதிரொலி
கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி திரளி கண்மாய் பகுதியில் முறைகேடாக மண் எடுக்கப்படுவது குறித்து “ஜியோ நியூஸ் தமிழ்” செய்தி ஊடகம் ஆதாரத்துடன் செய்தியை வெளியிட்டது. அதன்பிறகு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தினர் தற்காலிகமாக மண் எடுப்பதை நிறுத்தி இருந்தனர்.


அப்போது கூட அதிகாரிகள முறையாக ஆய்வு செய்யவில்லை; நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் மீண்டும் திரளி கண்வாய் பகுதியில் மண் அல்லப்படுவது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் மண் எடுப்பதற்கு யாரிடம் ?எந்த அரசு அதிகாரிகளிடம்? அனுமதி வாங்கினார்கள் என்று கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ரகசியம் காக்கப்படுவது ஏன்?
முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் நிறுவனத்தின் விவரங்களை RTI பிரிவு 2(f)-ஐக் காட்டி மறைப்பது, ஒரு பெரும் ஊழலை மூடி மறைக்கும் முயற்சியோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

பதிலளிக்க அஞ்சும் உதவி இயக்குநர் (AD)!
மக்களின் வரிப்பணத்தில் முறையாக ஊதியம் பெறும் அதிகாரிகள், மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க அஞ்சுவது ஏன்? இது குறித்து விளக்கம் கேட்க, ஜியோ நியூஸ் தமிழ் சார்பில் மதுரை மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநரை (AD) பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்க முயன்றபோது, அவர் அழைப்புகளை எடுக்கவில்லை.
விசாரணை முடியும் முன் ‘சிவப்பு கம்பள’ வரவேற்பு!
புகார்கள் மீது இன்னும் இறுதி முடிவே எடுக்கப்படாத நிலையில், நாளை (மார்ச் 03) முதல் மீண்டும் அதே ALR தனியார் நிறுவனம் கண்மாயில் மண் அள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியிருப்பது விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. “குற்றம் சாட்டப்பட்ட நிறுவனத்திற்கே மீண்டும் அனுமதி வழங்குவது எவ்வகை நியாயம்?” எனத் திரளி கிராம மக்கள் ஆவேசமாகக் கேட்கின்றனர்.
மாவட்ட ஆட்சியரின் அதிரடி தேவை!
விதிமீறல் புகார்களைக் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு, கனிமவளக் கொள்ளையர்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும் அதிகாரிகள் மீது மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அவர்கள் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நீர்நிலையைப் பாதுகாப்பாரா? அல்லது அதிகாரிகளின் மெத்தனத்திற்கு அனுமதி அளிப்பாரா? என்பதே மதுரை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.






