மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் நள்ளிரவில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இரவில் பெட்ரோல் குண்டு வீச்சு
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் இரவு நேரத்தில் திடீரென மர்ம நபர்கள் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறி அடித்து வெளிவந்து பார்த்த போது, மகாலட்சுமி கோயில் தெரு வழியாக 4 மர்ம இளைஞர்கள் பைக்கில் மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்தது மறைந்ததைப் பார்த்துள்ளனர்.
சிசிடிவி கேமராக்களில் சிக்கிய போதை ஆசாமிகள்
அது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்து பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார்? என கண்டுபிடிப்பதற்குள் அதே கும்பல் மதுரை ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி முதல் தெருவிலும் பெட்ரோல் குண்டுவீசி அலறவிட்டுள்ளனர். அங்கும் அவர்கள் யார் கண்ணிலும் சிக்கவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் இரவு முழுக்க உறங்காமல் அச்சத்தில் தெருவில் கூடியிருந்தனர்.
தொடரும் குற்றங்கள் – ஜெய்ஹிந்த்புரம்
கடந்த சில மாதங்களாக மதுரையின் சோலை அழகுபுரம், ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் இதுபோன்ற கும்பல்களின் அட்டகாசம் அதிகரித்திருப்பதாகவும் கஞ்சா புழக்கம் பல்வேறு குற்றச் சம்பவங்களை அரங்கேற்றி அட்டூழியத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், அங்குள்ள சிசிடிவி கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர் . சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார், 4 சிறுவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். மது போதையில் பெட்ரோல் குண்டு வீசியதாக அந்தச் சிறுவர்கள் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளுக்கு நாள் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மக்கள் குற்றம்சட்டம் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






