மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 22 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த வலையங்குளம் பாலமுருகனுக்கு பரிசாக கார் வழங்கப்பட்டது.

முதல் பரிசு கார்
மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. ம மொத்தம் 1,100 காளைகளுக்கும், 600 வீரர்களுக்கும் அனுமதியளிக்கப்பட்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 22 காளைகளை அடக்கி, வலையங்குளம் பாலமுருகன் முதலிடம் பிடித்தார். அவருக்குப் பரிசாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கும் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் வழங்கப்பட்டது.

அவரைத் தொடர்ந்து, 17 காளைகளை அடக்கி 2ஆம் இடம்பிடித்த அவனியாபுரம் கார்த்தி-க்கு பரிசாக இருசக்கர வாகனமும், 16 காளைகளை அடக்கி ரஞ்சித் என்பவர் 3வது இடமும் பிடித்தார்.

மேலும், சிறந்த காளையாக விருமாண்டி சகோதரர்களின் காளையான முத்து கருப்பன் தேர்வு செய்யப்பட்டு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் டிராக்டரும் பரிசாக வழங்கப்பட்டது.

காமடைந்தோர்க்கு சிகிச்சை
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் நூற்றுக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போட்டியில் பார்வையாளர்கள் மாடு பிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் என 30க்கு மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்றுள்ளனர்.

ஜல்லிக்கட்டு போட்டியை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், மதுரை மாவட்ட மக்கள், தமிழக அமைச்சர் மூர்த்தி, துணை மேயர் நாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர் என பலரும் கூடிய திருவிழாவாக மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா அமைந்தது.
மாட்டுப் பொங்கலான நாளை, மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.






