மதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்தையொட்டி 2 நாட்களாக நடைபெறும் சம்பவங்கள் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நீதிமன்ற உத்தரவுகளின் படியும், நூற்றாண்டு கால மரபுப்படியும் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.
ஆனால், சிக்கந்தர் தர்ஹா அருகே உள்ள எல்லைக் கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பு சர்ச்சையாக மாறியுள்ளது. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவால் மதுரையில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்துத்துவா அமைப்பினர் திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்தி வருவதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது. காவல்துறையினரின் தடையை மீறி அவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் இரண்டு நாட்களாக தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதில் காவலர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக நடைபெறும் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள். மெட்ரோ ரயில், எய்ம்ஸ், புதிய தொழிற்சாலைகள், வேலை வாய்ப்புகள். இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது” என்று கூறியுள்ளார்.






