மக்களுக்கு நல்லது செய்ய எதற்கு அரசியலுக்கு வரணும், நடிகராக இருந்துகொண்டே உதவி செய்யலாம் என்று நடிகர் சிவராஜ்குமார் கூறியுள்ளார்.

கன்னட திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் சிவராஜ்குமார். இவர் நடிகர் ரஜினிகாந்த்துடன் இணைந்து ஜெயிலர், தனுஷீடன் கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், சிவராஜ்குமார், உபேந்திரா நடித்துள்ள 45 திரைப்படம் டிச. 25-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக சிவராஜ்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது “தமிழ்நாட்டில் சினிமா பிரபலங்களான எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை பலரும் அரசியலுக்கு வந்துள்ளனர். ஆனால் கர்நாடகாவில் ஏன் அப்படி இல்லை” என்று சிவராஜ்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “மக்களுக்கு நல்லது செய்ய எதற்கு அரசியலுக்கு வரணும்? நடிகராக இருந்துகொண்டே உதவி செய்யலாம். காரணம், இது என்னுடைய பணம். யாரிடமும் பாரபட்சம் பார்க்காமல் உதவி செய்வேன்” என்று சிவராஜ்குமார் பதிலளித்தார்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சில மாதங்களுக்கு முன்பு சாமி தரிசனம் செய்த சிவராஜ்குமார், ” நடிகர் விஜய் அரசியலுக்கு வரும்போதே அவர் பேசியது எனக்கு பிடித்தது. விஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன். ஆனால், கரூர் கூட்டநெரிசலில் 41 உயிர் போனது கஷ்டமாக இருந்தது. விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.