பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கும் நடவடிக்கைகளை விரைவுப்படுத்த கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் முக்கிய உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தல் வர உள்ளது. எனவே, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்கப்படும் ரொக்கம் எவ்வளவு என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கும் நடவடிக்கைகளை விரைவுப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், “2026-ம் ஆண்டு தைத் திருநாளை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதனை நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், டோக்கன் விநியோகம் முறையாக நடைபெற வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் துவங்கப்படும் தேதி தனியே பின்னர் அறிவிக்கப்படும்.
மண்டலங்களில் செயல்படும் நியாய விலைக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளுக்கு ஜனவரி 2-ம் தேதிக்குள் டோக்கன்கள் விநியோகம் செய்ய வேண்டும். நியாய விலைக் கடைகள் நடத்தும் அனைத்து வகையான நிறுவனங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்ய தேவையான டோக்கன்களை கூட்டுறவுத்துறை மூலம் அச்சிட்டு வழங்கிட அறிவுறுத்தப்படுகிறது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு சுழற்சி முறையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் மேற்கொள்ள ஏதுவாக குடும்ப அட்டைகள் பிரிக்கப்பட்டு, தெருவாரியாக பராமரிக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் அட்டைதாரர் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வேண்டிய நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு டோக்கன்களை விற்பனையாளர்கள் குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்குச் சென்று வழங்க வேண்டும்.
முதல் நாள் முற்பகல் 100 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பிற்பகல் 100 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்வதற்கு டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும். இடவசதியைப் பொறுத்து, இரண்டாம் நாள் முதல் தினந்தோறும் முற்பகல் 150 முதல் 200 பேர் வரை மற்றும் பிற்பகல் 150 முதல் 200 பேர் வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்வதற்கு டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும்.
எனினும், பொங்கல் பண்டிகைக்கு முன்பே பரிசுத் தொகுப்பு விநியோகம் நிறைவடையும் வகையில் டோக்கன்களில் தேதி குறிப்பிட்டு வழங்கப்பட வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்வதற்கான டோக்கன்கள் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடை பணியாளர்களால் மட்டுமே விநியோகம் செய்யப்பட வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் நியாய விலைக் கடையைச் சாராத வேறு நபர்கள் அல்லது அரசியல் சார்ந்த நபர்களைக் கொண்டு டோக்கன்கள் விநியோகம் செய்யக் கூடாது.
அதிகளவு குடும்ப அட்டைகள் உள்ள நியாய விலைக் கடைகளில் குறிப்பாக 1500 குடும்ப அட்டைகளுக்கும் மேல் இணைக்கப்பட்டுள்ள நியாய விலைக் கடைகள் விவரம் தொகுக்கப்பட்டு அக்கடைக்களுக்கு டோக்கன்கள் மற்றும் பரிசுத் தொகுப்பு விநியோகப் பணிக்கென கூடுதல் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக 1500 குடும்ப அட்டைகளுக்கு உட்பட்ட நியாய விலைக் கடைகளில் இரண்டு பணியாளர்களும், 1500-க்கும் மேல் குடும்ப அட்டைகளைக் கொண்ட நியாயவிலைக்கடைகளில் மூன்று பணியாளர்களும் டோக்கன்கள் விநியோகம் மற்றும் பரிசுத் தொகுப்பு விநியோகம் மேற்கொள்ளும் வண்ணம் போதிய அளவு பணியாளர்களை முன் கூட்டியே நியமனம் செய்து தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சட்டம் ஒழுங்கு பிரச்னை எழக் கூடிய நியாயவிலைக்கடைகள், அதிக கூட்ட நெரிசல் ஏற்படக் கூடிய நியாயவிலைக்கடைகள் போன்ற கடைகளின் பட்டியல்கள் முன் கூட்டியே தயார் செய்யப்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அல்லது காவல்துறை ஆணையாளருக்கு அனுப்பப்பட்டு போதிய காவல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதை உறுதி செய்திட வேண்டும். ஒவ்வொரு நியாய விலைக் கடையிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு போதிய அளவில் முன்கூட்டியே இருப்பு வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்வதுடன், உரிய தரத்துடன் இருப்பதனையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். டோக்கன்கள் விநியோகம் குறித்த விவரங்களைத் தினந்தோறும் மாலை 5 மணிக்குள் தவறாது கூகுள் ஷீட் வாயிலாகப் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






