“நான் தொடங்க உள்ள புதிய கட்சி ஏழை, எளிய மக்களுக்கான கட்சியாக இருக்கும். கட்சி பெயரை விரைவில் அறிவிப்பேன்” என்று கமுதி பொதுக்கூட்டத்தில் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்திலும், அதிமுக கட்சியினர் இடையே, சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு சசிகலா தலைமையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை கொண்ட கட்சி கொடியை வி.கே.சசிகலா அறிமுகப்படுத்தினார்.

எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டுகள்

அதைதொடர்ந்து பேசிய சசிகலா, “முதல்வராக உட்கார வைத்தவர் என் முதுகில் குத்தினார்; கட்சிக் கொடியை பயன்படுத்தக்கூடாது என்றனர். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுகவில் எவ்வளவோ பிரச்னைகள்; தொடர்ந்து 10 தேர்தல்களில் தோற்றனர் என்று குறிப்பிட்டு பேசினார்.

ஓபிஎஸ்-க்கு நெருக்கடி..?

“ஓ.பன்னீர்செல்வம் மீது எந்த குறையும் இல்லை; அவருக்கு தற்போது ஒரு கும்பல் நெருக்கடி தருகிறது. நான் எப்போதும் கோபத்தை காட்டுவதில்லை; அது எம்ஜிஆரின் பழக்கம்” என்றார்

“பெங்களூரு சிறையில் எனக்கு தினமும் பிரச்னை இருந்தது; பரோல் கிடைத்த போதும் அப்போதைய முதல்வர் கட்டுப்பாடு விதித்தார் என்று சசிகலா குற்றம்சாட்டினார்.

“புதிய கட்சி ஆரம்பிக்கிறேன்”

“அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் புதிய கட்சியை தொடங்குகிறேன்; 9 வருடங்களாக அமைதியாக இருந்ததுபோல் இனி என்னால் இருக்க முடியாது” என்று வி.கே.சசிகலா கோவத்துடன் கூட்டத்தில் பேசினார்.

மிக குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி குறித்து சசிகலா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து இருக்கின்றார். எனவே இதற்கெல்லாம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி என்ன பதிலளிக்க போகின்றார் என்பதனையும் எதிர்பார்த்து மக்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.