பிஹார் தேர்தல் முடிவு உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கூறியுள்ளார்.

பிஹார் மாநில சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11-ம் தேதியும் தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் தேசிய ஜனநாய கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று 202 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது.

இந்தியா கூட்டணி 35 தொகுதிகளில் வெற்றி பெற்று படு தோல்விசியடைந்தது. பிற கட்சிகள், சுயேட்சைகள் 6 தொகுதிகளை கைப்பற்றின. பிஹாரில் 61 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் பிஹார் தேர்தல் முடிவு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “மகா கூட்டணி மீது நம்பிக்கை வைத்த கோடிக்கணக்கான பிஹார் வாக்காளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிஹாரின் இந்த தேர்தல் முடிவு உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது. ஆரம்பத்திலிருந்தே நியாயமானதாக இல்லாத ஒரு தேர்தலில், எங்களால் வெற்றி பெற முடியவில்லை.

சட்டமைப்பு மற்றும் ஜனநாயகத்தைக் காப்பதற்கான ஒரு போராட்டமாகவே இந்தக் களத்தை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும், இந்தியா கூட்டணியும் பார்க்கின்றன. இந்த முடிவைஆழமாக மீளாய்வு செய்து, ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கான தங்கள் முயற்சிகளை மேலும் செயல்திறன் மிக்கதாக மாற்றுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.