கேரளாவில் நடிகையை கடத்தி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியது தொடர்பாக நடிகர் திலீப் மீதான வழக்கில் இன்று (டிசம்பர் 8) தீர்ப்பளிக்கப்படுகிறது.

கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே அத்தாணி பகுதியில், கடந்த 17.2.2017 அன்று பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து திருச்சூரில் இருந்து கொச்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் காரில் வந்த கும்பல் கேரவனை தடுத்து நிறுத்தி நடிகையை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து நடிகை அளித்த புகாரின் பேரில் மாநில குற்றப்புலன் விசாரணை பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, பெரும்பாவூர் அருகே கூவப்படியை சேர்ந்த பல்சர் சுனில் என்ற சுனில் குமார் என்பவர் உள்பட சிலர் பலாத்காரத்தில் ஈடுபட்டதும், அவர் நடிகையின் கார் டிரைவராக இருந்ததும் தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் மலையாள பிரபல நடிகர் திலீப்புக்கும், நடிகைக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, திலீப் சதி திட்டம் தீட்டி நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தெரியவந்தது. நடிகர் திலீப், பல்சர் சுனில் உள்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை எர்ணாகுளம் முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் திட்டமிட்டு என்னை சிக்க வைத்து உள்ளதாக நடிகர் திலீப் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் 251 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்படுகிறது. நீதிபதி ஹனி எம்.வர்கீஸ் இன்று காலை 11 மணிக்கு தீர்ப்பளிக்கிறார்.