தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2026-ம் ஆண்டிற்கான முதல் அமைச்சரவை கூட்டம் ஜனவரி 6-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தலைமைச்செயலகத்தில் ஜனவரி 6-ம் தேதி காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்க உள்ளது.
ஜனவரி 20-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் 2026-ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தில் ஆளுநர் வாசிக்க உள்ள உரையை தயாரிப்பதற்கான ஆலோசனைகள் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய திட்டங்கள் குறித்து முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

தமிழ்நாட்டில் 2026- ம் ஆண்டு தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அரசு மேற்கொள்ள வேண்டிய முக்கிய திட்ட்ங்களுக்கு ஜனவரி 6-ம் தேதி கூடும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்த கோரிக்கையை முன் வைத்து ஜனவரி 6-ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. சென்னையில் தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ள நிலையில், நடைபெற உள்ள  இந்த அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.