நாடாளுமன்றத்திற்குள் ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கண்ணாடிகள், பென் கேமராக்கள் மற்றும் அதிநவீன, எலக்ட்ரானிக் உபகரணங்களை கொண்டு வர எம்.பிக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்ற போது மக்களவையில் திரிணமுல் காங்கிரஸ் எம்.பி சவுகதா ராய், இ சிகரெட் எனப்படும் மின்னணு சிகரெட் பிடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை எம்.பி ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டது பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பல எம்.பிக்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளை படம் பிடிக்கும் சம்பவங்களும் நடந்தன. இவற்றை ஒழுங்குபடுத்த அதிரடி நடவடிக்கையில் மக்களவை செயலகம் இறங்கியுள்ளது.
இது தொடர்பாக அனைத்து எம்.பிக்களும் சுற்றறிக்கையை மக்களவை செயலகம் அனுப்பியுள்ளது. அதில், தற்போதைய காலக்கட்டத்தில் அதிநவீன எலக்ட்ரானிக் உபகரணங்கள் மிக எளிதாக சந்தையில் கிடைக்கின்றன. குறிப்பாக, ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கூலிங் கிளாஸ், பென் கேமராக்கள் உள்ளிட்டவை நிறைய வந்துவிட்டன.
இந்த உபகரணங்கள் காட்சிகளை, ஒலிகளைப் பதிவு செய்யும் வசதிகளுடன் உள்ளன. இவற்றை தவறான வழிகளில் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இது, சில சமயங்களில் எம்.பி,க்களின் தனியுரிமையைப் பாதிக்கின்றன. மேலும், இதுபோன்ற பொருட்கள் நாடாளுமன்றத்தில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் வகையிலும் இருக்கின்றன. எனவே, இதுபோன்ற பொருட்களை எல்லாம், எம்.பி.,க்கள் அனைவரும் நாடாளுமன்ற எஸ்டேட் வளாகத்திற்குள் வரும் எந்த பகுதியிலும் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.





