இந்திய தேர்தல் ஆணையம் தவெக கட்சிக்கு ‘விசில் சின்னம்’ ஒதுக்கியுள்ளதை அடுத்து, அக்கட்சி தொண்டர்களும், கட்சித் தலைவர் விஜய்யும் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

உற்சாகத்தை தவெக தொண்டர்கள்
இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது. அதற்கு அக்கட்சியின் தலைவர் விஜய், “நல்லவர்களின் சின்னம் விசில் என்று குறிப்பிட்டு விசில் சின்னத்தை பாராட்டி வரவேற்றுள்ளார்.

தலைவர் விஜய் – நன்றி
இதுதொடர்பாக விஜய் அவர்களின் ‘எக்ஸ்’ தளப் பதிவில், “இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் சின்னத்திற்காக நாம் விண்ணப்பித்திருந்த சின்னங்களில் ஒன்றுதான் விசில். தற்போது தேர்தல் ஆணையம் நமக்கு அந்த விசில் சின்னத்தையே ஒதுக்கீடு செய்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். இதற்காகத் தேர்தல் ஆணையத்திற்குக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.

“விசில் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாக எழும் ஒலி.
ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழைப்பவர்கள், அவ்விலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி.
இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில். அந்த வகையில், விசிலைப் பாதுகாப்பின் அடையாளம் என்றும் குறிப்பிடலாம்” என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மேலும், “தமிழக வெற்றிக் கழகம் ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்துக் கட்டியம் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே நமக்கான ஊக்கமும் உத்வேகமும் என்பதே இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு” என்று உற்சாகம் தெரிவித்தார்.

விசில் சின்னம் பற்றி…
நமது சின்னம் விசில்.
நல்லவர்கள் சின்னம் விசில்.
நாடு காப்பவர்கள் சின்னம் விசில்.
ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில்.
ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில்.
வெற்றிச் சின்னம் விசில்.
“வருகிற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம், விசில் போடுவோம்” என்று விஜய் பதிவிட்டுள்ளார்.
விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த தொண்டர்களும் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி வெடித்துக் கொண்டாடினர்.






