தேர்தல் ஆணையத்தின் மதிப்பு எவ்வளவு குறைந்துள்ளது என்பதை பிஹார் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பிஹார் சட்டமன்ற தேர்தலில், மொத்தமுள்ள, 243 தொகுதிகளில், 200க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி, பாஜக, தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜக 89 தொகுதிகளிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. மீண்டும் நிதிஷ் குமார் பிஹார் முதல்வராக உள்ளார். இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆர்ஜேடி 25 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.

பிஹார் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் நிதிஷ் குமாருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மூத்த தலைவர் நிதிஷ் குமாரின் தீர்க்கமான வெற்றிக்கு வாழ்த்துக்கள். அத்துடன் பிஹார் மக்களின் எதிர்பார்ப்புகளை அவர் பூர்த்தி செய்யவும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இளைஞர் தலைவர் தேஜஸ்வி யாதவின் சோர்வில்லாத தேர்தல் பிரசாரத்திற்கும் நான் பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன். இந்தியா கூட்டணியின் தலைவர்கள் செய்தியைப் படித்து, வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள மூலோபாய ரீதியாக திட்டமிடும் திறன் கொண்ட அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள்.

தேர்தல் ஆணையத்தின் மதிப்பு எவ்வளவு குறைந்துள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. தேர்தல் ஆணையத்தின் நற்பெயர் மிகவும் தாழ்ந்த கட்டத்தில் உள்ளது. வெற்றி பெறாதவர்களுக்கு கூட நம்பிக்கை அளிக்கும் வகையில் தேர்தல் ஆணைய செயல்பாடு இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.