தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் திருநெல்வேலியைச் சேர்ந்த 7 வயது பள்ளி மாணவி வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்
திருநெல்வேலி டவுண் சைலப்பர் தெருவை சேர்ந்த தம்பதிகள் காந்திமதிநாதன் – மாரியம்மாள். இவர்களின் 7வயது மகளான காவியா, நெல்லை காந்திநகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 2ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவி
மாணவி காவியா உத்தரப் பிரதேசம் மாநிலம், காசியாபாத் நகரில் நடைபெற்ற தேசிய அளவில் 12 வயதிற்குள் உட்பட்டோருக்கான துப்பாக்கிச்சுடும் போட்டியில் தமிழக அணி சார்பில் கலந்துகொண்டு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
இதுகுறித்து மாணவி காவியா குறித்து, பெற்றோர் கூறியது,
“5 வயது முதல் காவியா பாரத் ரைபிள் கிளப்பில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி பெற்று வந்ததாகவும், ஏற்கெனவே மாவட்ட அளவில் ஒரு தங்கப்பதக்கமும், மாநில அளவில் 2 தங்கப்பதக்கங்களும் வென்றுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.
அடுத்து சர்வதேச போட்டியில் பங்கேற்பு
இப்போது தேசிய அளவில் வெள்ளி வென்றுள்ளார். அடுத்ததாக பூடானில் மே மாதம் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் போட்டிக்கு சென்றுவர தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து கொடுத்தால் மாணவிக்கு மேலும் ஊக்கமாக அமையும் என்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசுக்கு கோரிக்கை
விளையாட்டுத்துறையில் மாநில அளவில், தேசிய அளவில் பங்கேற்கும் தமிழகத்தில் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்றும் வெற்றியாளர்களுக்கு ஊக்கத் தொகையும் அளிக்க வேண்டும் என்றும் விளையாட்டுத் துறை பயிற்சியாளர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






